பெற்றோர் என்ன செய்யக்கூடாது? மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? முதல்வரின் வேண்டுகோள்

கல்வி விவகாரத்தில் பெற்றோர் என்ன செய்யக்கூடாது என்றும், மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெற்றோர் என்ன செய்யக்கூடாது? மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? முதல்வரின் வேண்டுகோள்
பெற்றோர் என்ன செய்யக்கூடாது? மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? முதல்வரின் வேண்டுகோள்

சென்னை: கல்வி விவகாரத்தில் பெற்றோர் என்ன செய்யக்கூடாது என்றும், மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்து, “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், புதிய புதிய படிப்புகள் ஏராளமாக வந்துவிட்டது. அதனைக் கற்க முன்வர வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

புதிய புதிய தொழில்கள் உருவாகி வருகிறது. அந்த நிறுவனங்களுக்கு என்னமாதிரியான வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என்பதை அறிந்து அவற்றைப் படிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும்போதே, தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இணையதளங்களிலேயே, நிறைய பட்டயப் படிப்புகள் வந்துவிட்டன. அவற்றை இடைப்பட்ட காலத்திலேயே கற்றுக் கொள்ளலாம். இத்தகைய வாய்ப்பை, மாணவர்கள் பயன்படுத்தும்போது கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறும்போது, வேலைவாய்ப்பு காத்துக்கொண்டிருக்கும்.

தற்போதைய நிலைப்படி, மாணவர்கள் தங்களது கல்லூரிப் படிப்பினை முடித்துவிட்டு, கூடுதல் ஆண்டுகள் செலவிட்டால்தான், வேலைவாய்ப்பு பெறுவதற்கான கூடுதல் பாடப்பிரிவுகளைப் படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, இத்தகைய நவீன பாடப்பிரிவுகளை கல்லூரிப் படிப்பின்போதே வழங்கிட இந்த அரசு முனைப்பைக் காட்டி வருகிறது.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் குறுகியகாலத் திறன்பயிற்சிகளையும் நான் முதல்வன் இணைய தளம் வழங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய பாடப்பிரிவுகள் குறித்து தகுந்த வழிகாட்டுதலை வழங்கும் வகையில் நான் முதல்வன் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மென்மேலும் அவ்வப்போது புதிய, கூடுதல் விவரங்களை வழங்குவதற்காக, தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியிலும் நம்முடைய இளைஞர்களுக்கு மொழித் திறன் இருக்க வேண்டும். 

தமிழ் - தாய்மொழி! ஆங்கிலம் - உலகத்தோடு நம்மை இணைக்கும் மொழி! இந்த இரண்டு மொழிகளிலும் எழுத, படிக்க, பேச மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல மொழி ஆற்றல் இருந்தால்தான் நம் வளர்ச்சியை அது வானளவுக்கு உயர்த்தும். கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவரும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது ஆங்கிலப் பேச்சாற்றல். வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போதும் சரி – வேலை கிடைத்த பின்னரும் சரி – இன்றைய பணிச்சூழலில் ஆங்கிலப் பேச்சாற்றல் என்பது தவிர்க்கமுடியாத தேவையாக இருக்கிறது. 

இந்த ஆங்கிலத்திறன் குறைவாக இருக்கும்போது சிலருக்கு, ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விடுகிறது. அதன் காரணமாக, ஆங்கிலப் பேச்சாற்றல் குறைவாக இருக்கும்போது, அவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும்போது, அங்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டு விடுகின்றனர். எனவே, இன்றைய சூழலில் மாணவர்களின் தேவை அறிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் பருவத்திலேயே  ஆங்கிலப் பேச்சாற்றல் என்ற பாடத்திட்டம் திறன்மிகு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் உதவியுடன், அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்து மாணவர்களுக்கும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும்.

ஆங்கிலம் மட்டுமன்றி, ஜெர்மன், ஜப்பானிய மற்றும் பிரெஞ்ச் மொழித் திறன்பயிற்சிகளும் வழங்கப்படும். இதன் மூலம், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுகளை கற்பதில் இருக்கக்கூடிய சிரமங்கள் குறையும் என்பதோடு கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும்போது, ‘எங்களால் முடியும்’ என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் நாளேடுகளை, புத்தகங்களை தொடர்ந்து வாசியுங்கள். இதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனைகளை எழுதிப் பாருங்கள். கருத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் என்பது மிகமிக முக்கியமான திறமை! நம்மை நாமே அறிந்துகொள்ள, எடைபோட இது ஒரு சிறந்த வழிமுறை! என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், 
என்ன படிக்கலாம்?
எங்கு படிக்கலாம்?
எந்த வகையான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்?
இளைஞர்களை எப்படி நாம் பக்குவப்படுத்தலாம்?
இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள் என்னென்ன?
பன்னிரண்டாம் வகுப்பு படித்த பெரும்பாலானவர்கள் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கக்கூடிய பிற துறைப் படிப்புகளையும் அவர்கள் உணர்ந்திருந்தால் இதுமாதிரி நிச்சயமாக நடக்காது. பல்வேறு துறைசார் படிப்புகளைப் பற்றியும் மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களது பெற்றோர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பெற்றோர்கள், தங்களது ஆசைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லலாம். வழிகாட்டலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் திணிக்கக் கூடாது. அப்பா, அம்மாவின் ஆசைக்காக மட்டும் சேரும் பிள்ளைகள் - பின்னர், மனதளவில் சோர்வடைகிறார்கள். அவர்களால், முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தங்களது பிள்ளைகளுக்கு, எந்த மாதிரியான படிப்பில் ஆர்வம் இருக்கிறது என்று கேட்டு, அதில் படிக்க வையுங்கள். பல்வேறு படிப்புகளைக் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காகத்தான், ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டல் நிகழ்ச்சியை நம்முடைய அரசு தொடங்கி இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com