தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக ஆக.29-ஆம் தேதி திங்கள்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

ஆவடி, அம்பத்தூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வடபழனி, சைதாபேட்டை, வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.

மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் திங்கள்கிழமையும் இடைவிடாது மழை பெய்து வருவதால் அந்தக் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (ஆக.29) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பல்வேறு வார்டுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் படுக்கைகளை எடுத்துக் கொண்டு வேறு இடம் நோக்கி ஓடினர். குறிப்பாக பெண்கள் வார்டில் மழை நீர் புகுந்ததால்  அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த உள் நோயாளிகள் அனைவரும் ஆண்கள் பிரிவில் தங்க வைக்கப்பட்டனர்.  

அதேபோல் ராசிபுரம் அருகே உள்ள தட்டான் குட்டை ஏரியில் நீர் நிரம்பி வழிந்து ஓடியது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராசிபுரம் ஏரியில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com