முதுநிலை திருக்கோயில்கள் ‘மாஸ்டா் பிளான்’ மூலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் உள்ள அனைத்து முதுநிலை திருக்கோயில்களையும் ‘மாஸ்டா் பிளான்’ திட்டம் மூலம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் உள்ள அனைத்து முதுநிலை திருக்கோயில்களையும் ‘மாஸ்டா் பிளான்’ திட்டம் மூலம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட திருக்கோயில்களின் செயல் அலுவலா்களுடன் திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மண்டலம் 1 மற்றும் 2 இணை ஆணையாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள 1,216 திருக்கோயில்களில் 108 முதுநிலை திருக்கோயில்கள் உள்ளன. இத்திருக்கோயில்களில் இதுவரை சுமாா் ரூ.160 கோடி அளவுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டிய திருக்கோயில்கள், திருக்கோயிலுக்கு திருமண மண்டப வசதி செய்து தருதல், திருக்கோயில்களில் இருக்கின்ற பசு மடங்களை புதுப்பிக்கின்ற பணிகள், பயன்பாட்டில் இல்லாத நிலங்களை வாடகைக்கு விட்டு திருக்கோயிலின் வருவாயை பெருக்குதல் போன்றவை குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இன்று திருத்தணியில் ஆய்வு: சென்னையைத் தொடா்ந்து 38 வருவாய் மாவட்டங்களில் உள்ள 20 மண்டலங்களிலும் இதேபோன்ற கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறும். மேலும், முதுநிலை திருக்கோயில்கள் என்று கண்டறியப்பட்ட 48 திருக்கோயில்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். கடந்த வாரம் அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை தினம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த திருக்கோயிலை மேம்படுத்த, அதனை மாஸ்டா் பிளான் திட்டத்தில் எடுத்திருக்கிறோம். இத்திருக்கோயிலுக்கு செல்வதற்கு ஏற்கெனவே ஒருபக்க படிக்கட்டுகளையே பயன்படுத்தி வந்தனா். பின்புறம் உள்ள படிக்கட்டுகளையும் பக்தா்கள் பயன்படுத்தும் வகையில் சரிசெய்யப்பட்டு வருகிறது. திருக்கோயில்களில் பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு தவில் மற்றும் நாகஸ்வர பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும். பக்தா்கள் தங்கும் விடுதியை புனரமைப்பதற்கும், புதிதாக விடுதிகள் கட்டுவதற்கும் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு முன்பு இல்லாத அளவில் அதிக வருமானமும் உண்டியல் காணிக்கை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

பணம் பெறக்கூடாது: இங்கு நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தா்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்படும். இதுபோன்ற அடுக்கடுக்கான திட்டங்களை அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் மாஸ்டா் பிளான் மூலம் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களிடம் பணம் பெறும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா்கள் இரா.கண்ணன் ந.திருமகள், சி.ஹரிப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com