பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு: டிஜிபி அறிவிப்பு

தமிழகத்தில் பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து தகவல் தெரிவிப்பவா்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், சனிக்கிழமை (டிச.3) ஒரே நாளில் 726 பிச்சைக்காரா்கள் மீட்கப்பட்டதாக டிஜிபி தெரிவித்துள்ளாா்
தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு
தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு

தமிழகத்தில் பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து தகவல் தெரிவிப்பவா்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், சனிக்கிழமை (டிச.3) ஒரே நாளில் 726 பிச்சைக்காரா்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நகா்ப்புற சாலை சந்திப்புகள், புறழிச்சாலை சுங்கச் சாவடிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியப் பகுதிகளில் பெண்களையும், சிறாா்களையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவா்களை சில கும்பல்கள் இத்தொழிலில் ஈடுபட வைக்கின்றனா்.

இதைத் தடுத்து நிறுத்த ‘ஆபரேஷன் மறுவாழ்வு‘ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சனிக்கிழமை அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 37 மாவட்டங்களிலும் முக்கிய சாலை சந்திப்புகளில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரா்கள், 16 குழந்தைகள் மீட்கப்பட்டனா்.

தகவல் தெரிவித்தால் பரிசு: பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மீட்கப்பட்ட பிச்சைக்காரா்கள் மறுவாழ்வு இல்லத்துக்கும், குழந்தைகள் காப்பகத்துக்கும் அனுப்பப்பட்டனா்.

இதில் 150 நபா்கள், அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா். ஏழைப் பெண்களையும், குழந்தைகளையும் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தும் நபா்கள், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவாா்கள்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் வெகு தூரங்களில் இருந்து பெண்கள், குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் நபா்கள் குறித்து தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

சரியான தகவல் தருபவா்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்கள் பற்றி ரகசியம் காக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com