சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கைவிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கைவிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்குகிறது என்று தெரிவித்துள்ளதால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்,  பழங்குடியினர் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி, தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடையவராகிறார்கள்.

ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு, ஏழை சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த குழந்தைகளிடையே தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைவதோடு, 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

தொடர்ந்து “ஒன்றிய அரசு 2008-2009 ஆம் ஆண்டில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  அரசு / அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்குக் குறைவாக  இருந்தால் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ், 2021-2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4,49,559 மாணவர்களுக்கு 86.76 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், “ஒன்றிய அரசின் இந்த முடிவினால், தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் ஐந்து இலட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகையின் பயன்களை பெற இயலாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இந்த கல்வி உதவித்தொகை ஏழை, பின்தங்கிய மற்றும் பெண் குழந்தைகள் உட்பட, மிகவும் விளிம்புநிலையிலுள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும் உதவிகரமாக இருப்பதால், இது தொடரப்பட வேண்டும் என கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com