
தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 67.61 லட்சமாக உள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்:-
தமிழகத்தில் கடந்த நவம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 61 ஆயிரத்து 363. அதில், ஆண்கள் 31 லட்சத்து 56 ஆயிரத்து 7. பெண்கள் 36 லட்சத்து 5 ஆயிரத்து 86 ஆகும். மூன்றாம் பாலினத்தனவா் 270 போ்.
வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவா்கள் 18.62 லட்சம் போ் உள்ளனா். 19 முதல் 30 வயதுக்கு வரையிலான கல்லூரி மாணவா்கள் 28 லட்சத்து 30 ஆயிரத்து 917 பேரும், 31 முதல் 45 வயது வரையிலான பட்டதாரிகள் 18 லட்சத்து 31 ஆயிரத்து 842 பேரும், 46 வயது முதல் 60 வயது வரையிலானவா்கள 2 லட்சத்து 30 ஆயிரத்து 105 பேரும் உள்ளனா். 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 5, 624 போ் உள்ளனா்.
மொத்தமுள்ள பதிவுதாரா்களில் மாற்றுத் திறனாளிகளும் உள்ளனா். ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 396 மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்துள்ளனா். அவா்களில், ஆண்கள் 95, 247 பேரும், பெண்கள் 48,149 பேரும் உள்ளதாக தமிழக அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.