சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டுமாயின் அதில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்தவும்
சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டுமாயின் அதில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா்.

தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிச.15) தொடங்கியது. வெள்ளிக்கிழமை (டிச.16) வரை நடைபெறும் மாநாட்டில் 1,100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மருத்துவ மாணவா்களும், வல்லுநா்களும் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்கின்றனா். 600-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட உள்ளன.

பல்கலைக்கழக வெள்ளிவிழா அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்வில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநா் கணேஷ், சித்த மருத்துவப் பேராசிரியரும், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான டாக்டா் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பல்கலைக்கழக பதிவாளா் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது:

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் சமூகத்துக்கு ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியது. நாட்டின் தொன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்தா, கரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் அதிமுக்கிய பங்கு வகித்ததை எவரும் மறுக்க இயலாது. அதேபோன்று, இந்தியாவைக் கடந்து பிற நாடுகளிலும் அந்த மருத்துவம் வியாபித்துள்ளது. அதை உலகெங்கும் முன்னெடுத்து செல்வது அவசியம். அதன் பொருட்டு, கால சூழலுக்குத் தக்கவாறு சில விஷயங்களை அதில் மேம்படுத்துவது அவசியம்.

குறிப்பாக, சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். அதனுடன் அந்த மருத்துவ முறையை தரப்படுத்துதலும் இன்றியமையாத் தேவையாக உள்ளது. சித்தா்கள் அருளிய அந்த மருத்துவ முறையில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகளின் அளவுகள், குணங்கள் தற்போது எவ்வாறு பயன்பாட்டில் உள்ளன என்பதை ஆராய வேண்டும்.

ஏனென்றால், பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் குணத்துக்கும், அதே மூலிகைகள் வேறு மண் பரப்பில் வளரும் போது ஏற்படும் மாற்றத்துக்கும் வேறுபாடு உள்ளது. அவற்றை பகுப்பாய்ந்து நோய்களின் தன்மைக்கேற்ப சித்த மருத்துவத்தை மேம்படுத்துவதே தற்போதைய தலையாய தேவை என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் எஸ்.கணேஷ் பேசுகையில், ‘சித்தா பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்படும்; சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கென ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com