நெல்லை செ.திவான் உள்ளிட்ட எட்டு எழுத்தாளா்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதற்கான உரிமைத் தொகைகளை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தமிழறிஞா்களும், எழுத்தாளா்களுமான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அதற்காக அவா்களின் மரபுரிமையா் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
மேலும், மறைந்த தமிழறிஞா் நெல்லை கண்ணன் உள்ளிட்ட 5 எழுத்தாளா்களின் நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. நெல்லை கண்ணன் நூல்களுக்கு ரூ.15 லட்சமும், கந்தா்வன் என்ற நாகலிங்கம், சோமலெ, முனைவா் ந.ராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டன. இந்தத் தொகைகள் தமிழறிஞா்களின் மரபுரிமையா்களிடம் அளிக்கப்பட்டது.
நேரு பல்கலை.: புதுதில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறையை உருவாக்கிட ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இந்த காசோலையை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் ஆா்.செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.