எளிய மக்களின் உரிமைகளைக் காத்திடும் இயக்கமாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: முதல்வர்

எளிய மக்களின் உரிமைகளைக் காத்திடும் இயக்கமாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எளிய மக்களின் உரிமைகளைக் காத்திடும் இயக்கமாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: முதல்வர்

எளிய மக்களின் உரிமைகளைக் காத்திடும் இயக்கமாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த கிறிஸ்துமஸ் விழாவை நாம் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு  மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக்  கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எதிரான அரசுதான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதநேயத்தை வளர்ப்பது தான் திராவிடத்தினுடைய கொள்கை. 

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்கிற தத்துவத்தை எடுத்துவைத்த அண்ணா வழியைப் பின்பற்றி இன்றைக்கு திராவிட மாடல் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயேசுநாதராக இருந்தாலும், முகமது நபியாக இருந்தாலும், வள்ளலாராக இருந்தாலும் ஏழையின் பசியைப் போக்கிட வேண்டும், அவர்களின் துன்பங்களைக் களைந்திட வேண்டும் என்பதையே அருள்நெறியாக முன்வைத்தார்கள். 

சமய மார்க்கங்கள் சொன்னதை அரசியல் இயக்கமாக வழிநடத்தி, வெற்றிகரமாக அதனை செயல்படுத்தி வரக்கூடிய ஆட்சி தான் உங்கள் ஆட்சி, இந்த திராவிட மாடல் ஆட்சி. ஒரு துளி கண்ணீர் ஏழையிடமிருந்து வெளிப்பட்டாலும், அதனை துடைக்கவேண்டிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்க வேண்டும் அதுதான் என்னுடைய நோக்கம். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் ஆதிக்கத்தை நிலைநாட்டி, ஏழை எளிய மக்களை ஏமாற்றிட யார் நினைத்தாலும் அதனை அனுமதிக்காமல், எளிய மக்களின் உரிமைகளைக் காத்திடும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

நலிந்தோர் வாழ்வு நிமிர்ந்திட, அவர்கள் மகிழும்போது, கடவுளின் புன்னகையை நம்மால் கண்டுணர முடியும்.  அந்தப் புன்னகை எல்லாத் தரப்பிலும் வெளிப்பட வேண்டும் என்ற இலக்குடன்தான் திராவிட மாடல் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்து சாதனை படைத்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த முன்னோடி மொழியான தமிழ் மொழி தனித்தியங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதற்கு ஏராளமான சான்றுகள் வழங்கியும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பங்காற்றிய வீரமாமுனிவர், எல்லிஸ், கால்டுவெல், போன்றவர்களின் பங்களிப்பும் இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களைத் தொடர்ந்து தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வலியுறுத்தியவர் யார் என்று கேட்டால், பரிதிமாற் கலைஞர். அதனை நிறைவேற்றிக் காட்டியவர் கருணாநிதி.

மதத்தால் வெவ்வேறானவராக இருந்தாலும், மொழியால் நாம் எல்லோரும் தமிழர்கள். அந்த உணர்வுடன், மதநல்லிணக்கத்தை முன்வைத்து, ஒற்றுமையுடன் பயணிப்போம். கிறிஸ்துமஸ் திருநாள் சிறப்பாக அமையட்டும். அடுத்து வரக்கூடிய ஆங்கிலப் புத்தாண்டும் ஒளிமயமாகத் திகழட்டும் என உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com