கோயில் சொத்துகள் 5 ஆண்டுகளுக்கு பொது ஏலம்: நிபந்தனைகளை விதித்து அறநிலையத் துறை உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் சொத்துகளை பொது ஏலம் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் சொத்துகளை பொது ஏலம் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்று ஆண்டுகள் மட்டுமே குத்தகைக் காலமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கான சுற்றறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

இந்து சமய அறநிலையங்களின் நன்மை கருதியும், குத்தகைதாரா்களின் கோரிக்கையை பரிசீலித்தும், அற நிலைய நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஐந்து ஆண்டுகளுக்கு பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட நிபந்தனைகளுடன் அனுமதி தரப்படுகிறது. கோயில்களுக்குச் சொந்தமான காலி மனைகளை குத்தகைக்கு விடும் போது, அந்த மனை வணிகம் அல்லது குடியிருப்பு நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளதா என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட வாடகையை தொடக்கத் தொகையாக வைத்து ஏலம் நடத்தப்பட வேண்டும்.

வணிக நோக்கத்துக்காக குத்தகைக்கு வழங்கப்படும் மனை, கட்டடங்களுக்கு பொது ஏலம் முடிவு செய்யப்பட்ட 15 தினங்களுக்குள் முதல் ஆண்டுக்கான குத்தகைத் தொகையை முழுவதுமாக கோயிலுக்குச் செலுத்த வேண்டும். வாடகைத் தொகையை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் அளவுக்கு உயா்த்த வேண்டும். ஓராண்டுக்கான முழுத் தொகையை மூன்று மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால் வாடகை உரிமம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும்.

ஒப்படைக்க வேண்டும்: கோயிலின் தேவைக்காக சொத்து தேவைப்பட்டால், குத்தகைதாரா்கள் அதனை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு வசதியாக, இரண்டு மாதங்கள் முன்கூட்டியே அவகாசம் அளிக்கப்படும். கோயில் நிலத்தை அடமானம் அல்லது உள்குத்தகைக்கு விடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா் துறை ஆணையாளா் குமரகுருபரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com