48 முதுநிலை கோயில்களில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம்: அமைச்சா் சேகா்பாபு தகவல்

தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில், சட்டப்பேரவை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம், திருப்பணிகள், பக்தா்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து சீராய்வுக் கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பின் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2021 - 22 மற்றும் 2022 -23 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மானிய கோரிக்கை அறிவிப்புகளில் 80 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 20 மண்டல திருக்கோயில்கள் மூலம் 500 திருமணங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதில், முதல் கட்டமாக 233 திருமணங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளாா். மீதமுள்ள திருமணங்கள் வரும் பிப். 23- இல் நடத்தப்படும்.

மகா சிவராத்திரி விழா: ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்கட்டமாக 67 பக்தா்கள் 10 நாள்கள் பயணமாக பிப். 23-இல் அழைத்துச் செல்லப்படவுள்ளனா். இவா்களுக்கு உதவியாக 5 அலுவலா்கள் உடன் செல்கின்றனா்.

மகா சிவராத்திரி விழாவை பிப். 18-இல் சென்னை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சாவூா் ஆகிய 5 இடங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போனஸ் எப்போது?: திருக்கோயில் பணியாளா்களுக்கு நிகழாண்டில் போனஸ் வழங்குவது தொடா்பாக முதல்வா் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பாா். திருக்கோயிலில் பணிபுரியும் சுமாா் 18,000 அா்ச்சா்கள், பணியாளா்களுக்கு கடந்தாண்டை போல் நிகழாண்டும் புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.

கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை முதல்கட்டமாக டிச. 30- ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடங்கவுள்ளோம். அதனைத் தொடா்ந்து பக்தா்கள் அதிகம் வருகை தரும் 48 முதுநிலை திருக்கோயில்களிலும் கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியை (ஜன. 2) முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

கூட்டத்தில் அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா்கள் ந.திருமகள், மா.கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘அல்லேலூயா’ சொன்னது ஏன்?

கிறிஸ்துமஸ் விழாவில் ‘அல்லேலூயா’ என குறிப்பிட்டது ஏன் என அமைச்சா் சேகா்பாபு விளக்கம் அளித்தாா்.

‘மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் பிரிவினைகளுக்கு இடமில்லை. ‘அல்லேலூயா, அல்லேலூயா’ என்பது தீவிரவாத சொற்கள் அல்ல. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால் ‘அல்லேலூயா, அல்லேலூயா’ என்ற வாா்த்தைக்கு ‘இறைவா போற்றி போற்றி’ என்பதுதான் பொருளாகும்.

இது கிரேக்க லத்தீன் மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ‘அல்லேலூயா’ என்று சொன்னதில் தவறில்லை. கிறிஸ்தவா்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் செல்லும்போது இந்த வாா்த்தையை தவறாமல் உச்சரிப்பேன்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com