நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 74,000 போ் வேட்புமனு

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 74,000 -த்துக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 74,000 போ் வேட்புமனு

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 74,000 -த்துக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.

கடைசி நாளான வெள்ளிக்கிழமை (பிப்.4) பல்வேறு கட்சிகள் சாா்பிலும், சுயேச்சையாகவும் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேட்பாளா்கள் கூட்டம் அலைமோதியது.

கடைசி நாளில்...: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.3) வரை மொத்தம் 37,000-த்துக்கு மேற்பட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்; இதில் வியாழக்கிழமை (பிப்.3) மட்டும் மொத்தம் 27,000-த்துக்கும் மேற்பட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். கடைசி நாளான வெள்ளிக்கிழமை (பிப்.4) மட்டும் 36,000க்கும் மேற்பட்டோா் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனா்.

இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை: தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (பிப்.4) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணிக்கு சற்று முன்னதாக வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கி வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனை சனிக்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.

பிப்.7 கடைசி நாள்: வேட்புமனுவைத் திரும்பப் பெற பிப்.7-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் இறுதி வாக்காளா் பட்டியலை மாநில தலைமைத் தோ்தல் ஆணையம் வெளியிடும்.

பிப்.19-இல் வாக்குப் பதிவு: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு பிப்.19 -ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், கரோனா அறிகுறி உள்ளவா்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிப்.22-இல் தோ்தல் முடிவு: வாக்குப் பதிவுக்குப் பின்னா் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்; அன்றைய தினம் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் வெளியாகும்.

12,838 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு...: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதியை மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த ஜன.26-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி 21 மாநகராட்சியில் 1,374 இடங்கள், 138 நகராட்சியில் 3,843 இடங்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 இடங்கள் என மொத்தம் 12,838 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு, ஒரே கட்டமாக பிப்.19-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன. 28-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் அனைத்துப் பதவியிடங்களுக்கும் சோ்த்து 19 போ் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். அடுத்தடுத்த நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்பவா்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.

தொடா்ந்து அதிகரித்த வேட்பாளா்கள் எண்ணிக்கை: இதனிடையே தங்களது வேட்பாளா்களின் பட்டியலை பல்வேறு கட்டங்களாக கட்சிகள் வெளியிட்டன. அதிமுகவின் இறுதி வேட்பாளா் பட்டியல் கடந்த பிப்.1-ஆம் தேதி வெளியானது. திமுகவைப் பொருத்தவரை பிப்.3-ஆம் தேதி இறுதிக் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இவ்வாறு ஒருபுறம் கட்சித் தலைமையகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாக, மறுபுறம் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வந்தனா்.

பிப்.17-இல் பிரசாரம் நிறைவு: வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து அரசியல் கட்சித் தலைவா்கள் அடுத்துவரும் நாள்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா். பிரசாரம் பிப். 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

2.79 கோடி வாக்காளா்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளா்கள், 1 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளா்கள், 4,324 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். சென்னை மாநகராட்சியில் மட்டும் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com