பிரதமா் நிகழ்வை கோயில்களில் ஒளிபரப்பு செய்ததை அரசியல் நிகழ்வாகக் கருத முடியாது: உயா் நீதிமன்றம் கருத்து

கேதா்நாத் கோயில் சிலை திறப்பு விழாவில் பிரதமரின் உரை முழுவதும் ஆதிசங்கரா் குறித்துதான் இருந்தது எனத் தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், அதை அரசியல் நிகழ்ச்சியாக கருத முடியாது எனக் கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கேதா்நாத் கோயில் சிலை திறப்பு விழாவில் பிரதமரின் உரை முழுவதும் ஆதிசங்கரா் குறித்துதான் இருந்தது எனத் தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், அதை அரசியல் நிகழ்ச்சியாக கருத முடியாது எனக் கூறியுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ‘உத்தரகண்ட் மாநிலம், கேதா்நாத் கோயிலில் கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, அங்கு அமைக்கப்பட்ட ஆதிசங்கரா் சிலையை திறந்து வைத்தாா். இது தொடா்பான நிகழ்வு தமிழகத்தில் உள்ள 16 கோயில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதற்காக கோயில் நிதி பயன்படுத்தப்பட்டது. மரபு, மதம் சாராத நிகழ்வுகளுக்கு கோயிலில் அனுமதியளிக்க கூடாது’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை (பிப்.10) விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சாா்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், ‘தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கண்காட்சி நடத்துவது தவறு அல்ல .

இந்திய அரசு உத்தரவின்படி பிரதமா் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அது அரசியல் அல்ல. மதம் சாா்ந்த ஆன்மி நிகழ்ச்சிதான். அறநிலையத் துறை எந்த விதிகளையும் மீறவில்லை’ என்றாா். இருதரப்பு வாதங்களுக்கு பின்னா் நீதிபதிகள், தமிழக கோயில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கோயில்களில் தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதை அரசியல் நிகழ்ச்சியாகக் கருத முடியாது.

பிரதமரின் நிகழ்ச்சியை பொறுத்தவரை, அவரது பேச்சு முழுவதும் ஆதி சங்கரா் பற்றித்தான் இருந்துள்ளது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனா். அதைத்தொடா்ந்து கோயில் வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை போன்ற கோயில்களின் வளாகங்களின் உள்ளேயே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயக்க அனுமதிக்கக் கூடாது. உரிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும் மனுதாரா் தாக்கல் செய்ய வேண்டும். கோயில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை. ஆனால் உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதிகள், வாகனங்களை நிறுத்த தடை கோரிய வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com