நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள்: விழிப்புணர்வுக் கட்டாயத்தில் வாக்காளர்கள்!

குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நேரடி பொறுப்பும் வாய்ப்பும் உள்ள உள்ளாட்சிப் பதவிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற புரிதலும், விழிப்புணர்வும்
நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள்: விழிப்புணர்வுக் கட்டாயத்தில் வாக்காளர்கள்!

குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நேரடி பொறுப்பும் வாய்ப்பும் உள்ள உள்ளாட்சிப் பதவிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற புரிதலும், விழிப்புணர்வும் வாக்காளர்களிடம் ஏற்பட வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.
 தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள 12,607 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, மநீம உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தோர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என சுமார் 57,778 பேர் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.
 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக கருதப்பட்ட உள்ளாட்சிப் பதவிகள் இன்றைக்கு கௌரவப் பதவிகளாக மாறிவிட்டன. மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலை மாறி, இன்றைக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்களை முன் வைத்தால்தான் தேர்தலில் களம் இறங்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
 ஜனநாயக நாட்டில், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நேரடி பொறுப்பும் வாய்ப்பும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் சரியாக இயங்கும்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு பெறுவதை உறுதிப்படுத்த முடியும்.
 பிரச்னை வாரிசு அரசியலா, விலை போகும் வாக்காளர்களா?: வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து என்ற குரல் எழுப்பும் அரசியல் கட்சியினர், பணம், பரிசுப் பொருள்கள், இலவசங்கள் என எதிர்பார்க்கும் பயனாளிகளாக குடிமக்கள் மாற்றப்பட்டுள்ளது குறித்து பொருட்படுத்துவதில்லை.
 லஞ்சம் கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றம் என்றாலும்கூட, லஞ்சம் வாங்குவோர் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் விவகாரத்தில், வேட்பாளர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் மௌனித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 பணத்தையும் பரிசுப் பொருள்களையும் இலைமறை காயாக வழங்கி வந்த நிலை மாறி, இன்றைக்கு வெளிப்படையாக விநியோகிக்கும் அவல நிலை உருவாகிவிட்டது.
 தேர்தல் அறிவிக்கப்படும் வரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லாத நிலையிலும், பல லட்சம் ரூபாயைச் செலவிடும் தகுதி படைத்தோர் திடீரென நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
 முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சிப் பதவிகள்: குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, தெரு விளக்கு வசதி, சாலை வசதி, சுற்றுப்புற சுகாதாரம் என அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் நேரடி தொடர்புகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உள்ளது.
 அதனால்தான் பொதுத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்கூட, உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவை நாடுகின்றனர். தங்கள் வெற்றிக்காக உழைத்த நபர்களை, உள்ளாட்சித் தேர்தலின்போது வெற்றி பெற வைப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர்.
 கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்றுக் கட்சியினராக இருந்தாலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருந்து வருகிறது. அதாவது, சட்டப்பேரவைத் தேர்தலின்போது சொந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டு தங்களுக்கு விசுவாசம் காட்டும் மாற்றுக் கட்சியினருக்கு உள்ளாட்சித் தேர்தலில் நன்றிக் கடன் செலுத்துகின்றனர் சில எம்எல்ஏக்கள்.
 இந்த உபசரிப்பு ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சித் தலைமையின் அறிவிப்பை ஏற்று தேர்தல் களத்தை சந்திக்கும் வேட்பாளர்கள் தடுமாறி வருகின்றனர்.
 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் போன்று இல்லாமல், தங்களின் அடிப்படைப் பிரச்னைகளில் உடனிருந்து தீர்வு காண வேண்டியவர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்ற புரிதல் வாக்காளர்களிடம் ஏற்பட வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.
 பயனாளிகளாக மாறிய குடிமக்கள்: இதுதொடர்பாக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் க.பழனிதுரை கூறியதாவது: பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சிகளின் நிர்வாகப் பொறுப்புக்கு சென்றால் எவ்வளவு தொகையை, எப்படி சம்பாதிக்கலாம் என்பதை கணக்கீடு செய்து கொண்டு பதவியைப் பிடிக்க போட்டியிடும் அவலம் தொடங்கிவிட்டது.
 தேர்தல் அரசியல், மேம்பாட்டு அரசியல் என்பதற்கான புரிதல் மக்களிடம் ஏற்படவில்லை. கட்சி அரசியலும், தேர்தல் அரசியலும் வெவ்வேறானவை என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டியது அவசியம்.
 குடிமக்கள் என்ற பொறுப்புணர்வை மறந்து, பயனாளிகள் என்ற பொறுப்பற்ற சிந்தனை மக்களிடையே ஏற்பட்டுவிட்டது. ஜனநாயகத்துக்கு தயாராக இருப்பவர்களே குடிமக்கள். குடிமக்களுக்கான பொறுப்புகள் என்ன என்பது குறித்த சிந்தனை யாருக்கும் இல்லை.
 பொருளாதார சந்தையை மையமாகக் கொண்டு அரசியலும், கட்சிகளும் சுழன்று கொண்டிருக்கின்றன. எதிர்கால ஜனநாயகம் சிறப்புற வேண்டுமெனில், கிராம சுயராஜ்யம் குறித்தும், குடிமக்களின் பொறுப்புணர்வு குறித்தும் இளைய தலைமுறையினர் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com