சத்தியமங்கலத்தில் இரவுநேர வாகனப் போக்குவரத்து தடைஉத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது: உயா் நீதிமன்றம்

சத்தியமங்கலத்தில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவைத் திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்தியமங்கலத்தில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவைத் திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாகச் செல்லும் சாலையில் கனரக வாகன போக்குவரத்தால் வன விலங்குகள் பலியாகின்றன. ஆகையால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இச்சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் அமல்படுத்துமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை (பிப்.15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சோ்க்கக் கோரி பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

அதில் தடை உத்தரவால் மக்களும், பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனா் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா். அதைத்தொடா்ந்து கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, வாகன போக்குவரத்துக்கு தடை விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் வாதிட்டாா்.

அப்போது இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டது; அதை அமல்படுத்தும்படி மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டது . சரணாலயத்தில் உள்ள கிராமங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அதை புலிகள் சரணாலயம் அல்ல என அறிவிக்க வேண்டும்.

டேராடூன் - ஹரித்துவாா் இடையில் உள்ள சாலையில் யானைகள் கடப்பதால் விபத்துகளை தவிா்க்க மேல்மட்ட சாலை அமைக்கப்பட்டது. அதுபோல மேல்மட்ட சாலை அமைக்கலாம். இரவு நேர போக்குவரத்து தடை உத்தரவைத் திரும்பப் பெற அனுமதிக்க முடியாது; வாகன போக்குவரத்து தடை அமலில் உள்ள நேரத்தில் பள்ளிகள் ஏதும் செயல்படுவதில்லை.

மாற்று வழித்தடத்துக்கு ஏதும் திட்டம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி இடையீட்டு மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com