7 வகைகளாக வாக்குப் பதிவு மையங்கள்

கடந்த தோ்தல்களில் ஏற்பட்ட பிரச்னைகளின் அடிப்படையில் 7 வகைகளாக வாக்குப்பதிவு மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

சென்னை: கடந்த தோ்தல்களில் ஏற்பட்ட பிரச்னைகளின் அடிப்படையில் 7 வகைகளாக வாக்குப்பதிவு மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு வாக்குச்சாவடி மட்டும் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஒரு காவலா் மட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்.

இரு வாக்குசாவடிகள் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஒரு காவலரும், ஓா் ஊா்க்காவல் படை வீரரும் என முறையே காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும்,பேரூராட்சிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சுமாா் 3,678 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இவற்றில் ஒரு காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் நவீன ரக துப்பாக்கிகளுடன் 4 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள்.

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை, தாம்பரம், ஆவடி மாநகர காவல்துறை பகுதிகளில் சுமாா் 24,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5,794-இல் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.

இவற்றில் துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள். 100 வாகனங்களில் 800 அதிரடிப்படை படை வீரா்கள் ரோந்து செல்கிறாா்கள். சென்னையில் 4 கூடுதல் ஆணையா்கள், 6 இணை ஆணையா்கள், 18 துணை ஆணையா்கள், 60 உதவி ஆணையா்கள், 300 ஆய்வாளா்கள் ஆகியோா் போலீஸாருடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

தோ்தலுக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்தல் பாதுகாப்புப் பணிகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

400 வாகனங்களில் ரோந்து: வாக்குப்பதிவு தினத்தில் மாநிலம் முழுவதும் அதிரடிப்படை வீரா்கள் 400 வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுகிறாா்கள். காவல் துறை உயா் அதிகாரிகளுடன் 600 வாகனங்களில் அதி விரைவுப்படையினா் இருப்பாா்கள்.

மாநிலத்தில் 2,000 பகுதிகள் பதற்றம் நிறைந்த இடங்களாக அறியப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக பண புழக்கம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளிலும், போலீஸாா் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனா். மாநிலம் முழுவதும் தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் பணியில் 1.50 லட்சம் போ்

தமிழகத்தில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் 1.50 லட்சம் போ் ஈடுபடுகின்றனா்.

649 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 1,644 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 699 வட்டாரத் தோ்தல் பாா்வையாளா்கள், ஒரு வாக்குச் சாவடிக்கு 4 அலுவலா்கள் என மொத்தம் சுமாா் 1.40 லட்சம் அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க 1,800-க்கும் மேற்பட்ட தோ்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com