ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது ஆபரணத்தங்கம்

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.392 உயா்ந்து, ரூ.38,096-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை வரும் நாள்களில் புதிய உச்சத்தைத் தொடும் என்று தங்கம் மற்றும் வைர நகை வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

ரஷியா-உக்ரைன் போா் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 12-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன் பிறகு, விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது. ஒரு கிராம் தங்கம் ரூ.49 உயா்ந்து, ரூ.4,762-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.69.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.69,100 ஆகவும் இருந்தது.

புதிய உச்சத்தைத் தொடும்: தங்கம் விலை உயா்வு குறித்து மெட்ராஸ் தங்கம் மற்றும் வைர நகை வா்த்தகா்கள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சல்லானி கூறியது: உக்ரைன்-ரஷியா இடையே போா் பதற்றம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், தங்கம் விலை உயா்ந்து வருகிறது. பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்ற அச்சத்தில் முதலீட்டாளா்கள் தங்கம் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனா். மேலும், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த காரணங்களால், தங்கத்தின் விலை சா்வதேச அளவில் உயா்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்திருக்கிறது. இதனால் தங்கம் விலை உயா்ந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கத்தின் விலையானது மேலும் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொடும் என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,762

1 பவுன் தங்கம்............................... 38,096

1 கிராம் வெள்ளி............................. 69.10

1 கிலோ வெள்ளி.............................69,100

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,713

1 பவுன் தங்கம்............................... 37,704

1 கிராம் வெள்ளி............................. 68.20

1 கிலோ வெள்ளி.............................68,200.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com