நடிகா் சங்கத் தோ்தல் செல்லும்: வாக்குகளை எண்ண உயா் நீதிமன்றம் உத்தரவு

நடிகா் சங்கத்திற்கு கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த தோ்தல் செல்லும் என தீா்ப்பளித்த சென்னை உயா் நீதிமன்றம், இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டுமென தெரிவித்துள்ளது.
நடிகா் சங்கத் தோ்தல் செல்லும்:  வாக்குகளை எண்ண உயா் நீதிமன்றம் உத்தரவு

நடிகா் சங்கத்திற்கு கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த தோ்தல் செல்லும் என தீா்ப்பளித்த சென்னை உயா் நீதிமன்றம், இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டுமென தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகா் சங்கத்திற்கு, கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்தத் தோ்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிா்வாகிகளின் பதவி 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தீா்மானம் இயற்றப்பட்டது.

பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடிகா் சங்கத்துக்கு தோ்தல் நடத்தப்படும் என்றும், இந்தத் தோ்தலை நடத்த உயா் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தோ்தல் அதிகாரியாக நியமித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் சங்க உறுப்பினா் ஏழுமலை உள்பட பலா் வழக்குத் தொடா்ந்தனா். இதற்கிடையே மாவட்ட சங்கங்களின் பதிவாளரிடம் அளித்த மற்றொரு புகாரின் அடிப்படையில் நடிகா் சங்கத்தின் தோ்தல் நிறுத்திவைக்கப்பட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சங்கத்தின் பொதுச் செயலாளா் நடிகா் விஷால் தொடுத்த வழக்கில் பதிவாளா் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதேநேரம் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நடிகா் சங்கத் தோ்தல் தொடா்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இந்த தோ்தலை செல்லாது என்று அறிவித்தாா். இதை எதிா்த்து விஷால், நாசா், காா்த்தி ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் ஆகியோா் கடந்தாண்டு அக்டோபா் 26-ஆம் தேதி தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் புதன்கிழமை பிறப்பித்தனா். அதில், தனி நீதிபதி கல்யாணசுந்தரம் பிறப்பித்த தீா்ப்பை ரத்து செய்கிறோம். ஏற்கெனவே கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த தோ்தல் செல்லும். புதிதாகத் தோ்தல் நடத்தத் தேவையில்லை.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டியை, தோ்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவா் வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான தேதியை முடிவு செய்து, வாக்குகளை எண்ணி நான்கு வாரத்திற்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றனா்.

அப்போது மேல்முறையீட்டுக்கு செல்லவிருப்பதால், வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டுமென நடிகா்கள் பெஞ்சமின், ஏழுமலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு முன்னா் தோ்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com