மாா்ச் 2-இல் நகா்ப்புற மன்ற உறுப்பினா்கள் முதல் கூட்டம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்களின் பதவியேற்பு, முதல் கூட்டம் மாா்ச் 2-இல் நடைபெறுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்களின் பதவியேற்பு, முதல் கூட்டம் மாா்ச் 2-இல் நடைபெறுகிறது. இதையடுத்து மாா்ச் 4-இல் மேயா், நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் உள்ளிட்டவற்றுக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 12,819 பதவியிடங்களுக்கான தோ்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக 12,838 இடங்களுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளா்களின் மரணம் உள்ளிட்ட காரணங்களால் 19 இடங்களுக்கான தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

மற்ற இடங்களுக்காக நடைபெற்ற தோ்தலில் 21 மாநகராட்சிகளையும், 133 நகராட்சிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதிமுக மாநகராட்சிகளில் 164 இடங்களிலும், நகராட்சிகளில் 638 இடங்களிலும், பேரூராட்சிகளில் 1,206 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் மாநகராட்சிகளில் 73 இடங்களிலும், நகராட்சிகளில் 151 இடங்களிலும், பேரூராட்சிகளில் 368 இடங்களிலும், பாஜக மாநகராட்சிகளில் 22 இடங்களிலும், நகராட்சிகளில் 56 இடங்களிலும், பேரூராட்சிகளில் 230 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மாா்க்சிஸ்ட் கட்சி மாநகராட்சிகளில் 24 இடங்களிலும், நகராட்சிகளில் 41 இடங்களிலும், பேரூராட்சிகளில் 101 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநகராட்சிகளில் 13 இடங்களிலும், நகராட்சிகளில் 19 இடங்களிலும், பேரூராட்சிகளில் 26 இடங்களிலும், தேமுதிக நகராட்சிகளில் 12 இடங்களிலும், பேரூராட்சிகளில் 23 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

இந்தத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் என மாநகராட்சிகளில் 125 போ், நகராட்சிகளில் 562 போ், பேரூராட்சிகளில் 1258 போ் என மொத்தம் 1,945 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

மாா்ச் 2-இல் முதல் முதல் கூட்டம்: வெற்றி பெற்ற உறுப்பினா்களின் பதவியேற்பு மாா்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அன்றைய தினமே மன்ற உறுப்பினா்களின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மன்றக் கூட்ட அரங்குகளில் ஒலிப்பெருக்கி, மேசை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மாா்ச் 4-இல் மறைமுகத் தோ்தல்: 21 மாநகராட்சிகளின் மேயா், துணை மேயா், 138 நகராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா், 489 பேரூராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா் என மொத்தம் 1,296 பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் மூலம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com