முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவருடன் இருந்த
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவருடன் இருந்த அதிமுக நிர்வாகி உள்பட மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி ரூ. 3 கோடி மோசடி செய்ததாக, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் காளிமுத்துவின் தம்பியும், முன்னாள் வெம்பக்கோட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகியுமான விஜய நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். 
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நவ. 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை டிச. 17-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படலாம் என்பதால் ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார்.
அவரைக் கைது செய்ய 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக ராஜேந்திர பாலாஜியை தேடிவந்த போலீஸார், கேரளம், கர்நாடகத்தில் அவர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு விரைந்தனர். ஆனாலும் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை அறிய முடியவில்லை. இதையடுத்து, அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீûஸ (தேடப்படும் நபர்) போலீஸார் வழங்கினர்.
இதனிடையே, ராஜேந்திர பாலாஜி தன் உறவினர்களோடு கைப்பேசியில் பேசி வருவதைக் கண்காணித்து வந்த தனிப் படையினர், அவர் கர்நாடகத்தில் இருப்பதை உறுதி செய்தனர். பெங்களூரில் இருந்து 185 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹாசனில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 4 நாள்களாக அவர் தங்கியிருப்பதாக தனிப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதன்கிழமை ஹாசன் விரைந்த தனிப் படை போலீஸார், ஹாசன் மாவட்ட போலீஸார் உதவியுடன் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். போலீஸார் வருவதை அறிந்த ராஜேந்திர பாலாஜி, காரில் தப்பித்துச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்த தனிப் படை போலீஸார், ஹாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காரை மடக்கி அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவுச் செயலர் பாண்டியராஜன் (35), ராஜேந்திர பாலாஜியின் உறவினர் கணேசன் ஆகியோரையும் தனிப் படை போலீஸார் கைது செய்தனர். மேலும், ராஜேந்திர பாலாஜி தப்பிச் செல்ல உதவியதாக மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com