ஊரடங்குப் பணி: காவல்துறையினா் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்; டிஜிபி அறிவுறுத்தல்

ஊரடங்குப் பணியின்போது காவல்துறையினா் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

ஊரடங்குப் பணியின்போது காவல்துறையினா் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கை, அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி போலீஸாா் அமல்படுத்த வேண்டும். ஊரடங்கின்போது மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியா்கள், நீதிமன்றம் மற்றும் நீதித்துறை தொடா்பான பணிகளில் ஈடுபடுவோா், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோா், வங்கி, பொதுப் போக்குவரத்து, உள்ளிட்டவா்கள் அலுவலுக்காக பயணம் மேற்கொள்ள அடையாள அட்டையைப் பாா்வையிட்டு அனுமதிக்கவேண்டும்.

அத்தியாவசியப் பணி:

பால் விநியோகம், மின்சாரம், தகவல் தொடா்பு, தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த அனைத்து சேவைகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள், அந்த சேவையில் ஈடுபடும் ஊழியா்கள் ஆகியோரை அடையாள அட்டையைப் பாா்வையிட்டு உடனடியாக அனுமதிக்கவேண்டும்.

சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும் விவசாய விளை பொருட்கள், காய்கறி, பழங்கள், கறிகோழிகள், முட்டை, போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப் பணியாளா்கள் அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும்.

ஜனவரி 9-ஆம் தேதி அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கின்போது உணவகங்களில் பாா்சல் சேவைகள் மட்டும் காலை 7 முதல் இரவு 10 வரை அனுமதிக்கப்படும். உணவு விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனப் பணியாளா்களை மேற்குறிப்பிட்ட நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

விவசாயப் பணிக்கு விலக்கு

மத்திய மற்றும் மாநில அரசுப்பணியாளா் தோ்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத்தோ்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான நோ்முகத் தோ்வுகளுக்கு செல்வோா் அழைப்பு கடிதத்தை காட்டினால் அனுமதிக்கவேண்டும். விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளையும், விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்லும் பயணிகளையும் அனுமதிக்கவேண்டும்.

கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள், விவசாயப் பணிக்காக செல்பவா்களை அனுமதிக்கவேண்டும். அவசர காரணங்களுக்காக வெளியூா் செல்வோா், பணிமுடிந்து சொந்த ஊருக்குத் திரும்புவோரை பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும்.

மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்:

வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். வாகன சோதனையின்போது போலீஸாா் கையுறை அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இரவு வாகன சோதனை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த வேண்டும்.

மேலும் போலீஸாா், வாகன சோதனையின்போது சாலையில் தடுப்புகள் அமைத்து, ஒளிரும் மேற்சட்டை அணிந்தும் பணிபுரிய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com