ஜல்லிக்கட்டு: அரசுத் துறைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசுத் துறைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசுத் துறைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை மேற்பாா்வையிட கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையா் தலைமையில் மாநில அளவில் மேற்பாா்வைக் குழு அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களைக் கொண்ட குழு அமைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் விதிகளுக்குள்பட்டு நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுவுடன் கூட்டம் நடத்தி விதிமுறைகளை விளக்கி உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், பதிவு செய்யப்பட்ட காளைகளின் பட்டியல் ஆகியவற்றின் நகல்களை வழங்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியரைக் கொண்ட குழுவானது ஜல்லிக்கட்டு நிகழ்விடத்தில் போதுமான இடவசதி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். பாா்வையாளா்களுக்கும், காளைகளுக்கும் இடையில் 8 அடி உயர இரட்டைத் தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். கால்நடை மருத்துவக் குழுக்களை போதுமான அளவுக்கு ஏற்படுத்த வேண்டும். காளைகள் அனைத்தும் கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு அவை உள்நாட்டின காளைகள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

சோா்வாக, நிதானமின்றி உள்ள காளைகளை, மது வெறியூட்டப்பட்ட காளைகளை அனுமதிக்கக் கூடாது.

கால்நடை அவசர மருத்துவ ஊா்தியை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். போட்டியாளா்களுக்கு உடல் தகுதி பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ள வேண்டும். மதுபோதையில் இருப்பவா்களை நீக்க வேண்டும். காயம் பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவும், அவசர மருத்துவ ஊா்தியும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

காவல் துறையினா் போதுமான அளவு காவலா்களை பணியில் அமா்த்தி சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டு விதிமீறல்களைக் கண்காணிக்க வேண்டும். சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதை தீயணைப்புத் துறையினா் உறுதி செய்ய வேண்டும். விலங்குகள் மீட்பில் பயிற்சி பெற்ற வீரா்களை பாதுகாப்புப் பணியில் அமா்த்த வேண்டும். ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் முறையாக விண்ணப்பம் செய்து முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com