எட்டயபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்க பூமி பூஜை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
எட்டயபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்க பூமி பூஜை

போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

டி.என்.பி.எஸ்.சி, யூ.பி.எஸ்.சி, நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ மாணவியர்கள் குறிப்பாகக் கிராமப்புற மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்து போட்டித் தேர்வுக்குத்  தயாராகி வருகின்றனர். மழைக் காலங்களில் இவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.  மழை மற்றும் வெயில் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இடையூறு இல்லாமல் படிக்க நிரந்தர கட்டடம்  நூலக வசதியுடன் அமைக்க வேண்டும் என மாணவ மாணவியர்கள், கல்வியாளர்கள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் அடங்கிய பிரம்மாண்ட நூலகம் உட்பட ரூ.2 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்ட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சண்முகா நகரில் அறிவு சார் மையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. 

விழாவில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் கலந்துகொண்டு அறிவுசார் மைய கட்டுமான பணிகளைத் துவக்கி வைத்தார். நூலகம், படிப்பறை, பயிற்சி மையம், லாக்கர் உள்ளிட்டவைகளுடன் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் இந்த அறிவுசார் மையம் கட்டப்பட உள்ளது.  ஒரு ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இத்திட்டத்துக்குப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவில் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், இளநிலை பொறியாளர் சிவகுமார்,  திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர். ராதாகிருஷ்ணன், திமுக ஒன்றிய செயலர் நவநீத கண்ணன், எட்டயபுரம் பேரூர் கழக செயலர் பாரதி கணேசன்,  இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் இம்மானுவேல், மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலர் டாக்டர் சௌந்தரராஜன், மாவட்ட பிரதிநிதி கல்லடி வீரன், முன்னாள் நகரச் செயலர்கள் ஆழ்வார் உதயகுமார், மாரிமுத்து பாண்டியன், முனியசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் லெனின், வார்டு செயலர்கள் கதிர்வேல், பிச்சை, முகம்மது ராசு, ராமச்சந்திரன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com