முருகன் கோயில்களில் தைப்பூச விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி தைப்பூசத் தேரோட்ட விழா உள்விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1. பழனி பெரியநாயகியம்மன் கோயில். 2. பக்தர்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட திருச்செந்தூர் கோயில்.
1. பழனி பெரியநாயகியம்மன் கோயில். 2. பக்தர்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட திருச்செந்தூர் கோயில்.

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி தைப்பூசத் தேரோட்ட விழா உள்விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 பழனி தைப்பூசத் திருவிழா கடந்த 12 -ஆம் தேதி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் 6 -ஆம் நாளான திங்கள்கிழமை திருக்கல்யாணமும், வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி கோயிலின் உள்பிராகத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. வழக்கமாக பெரிய மரத்தேரில் வீதிகளில் நடத்தப்படும் தேரோட்டம் நிகழாண்டு கரோனா கட்டுப்பாடு காரணமாக சிறிய மரத்தேரில் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது.
 இதையொட்டி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து மாலை 4.40 மணிக்கு மேல் தம்பதி சமேதர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.
 பூஜைகளை அமிர்தலிங்க குருக்கள், செல்வசுப்பிரமணிய சிவாச்சார்யார் உள்ளிட்டோர் செய்தனர். கோயில் யானை கஸ்தூரி முன்னே செல்ல தேர் கோயிலின் உள்பிரகாரத்தில் உலா வந்தது.
 இதில் மண்டகப்படிதாரர்களோ, பக்தர்களோ, முக்கிய பிரமுகர்களோ யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் கோயில் பணியாளர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து வரும் 21 -ஆம் தேதி மாலை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் தெப்பத் தேரோட்டமும், இரவு கொடியிறக்கமும் நடத்தப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
 விழாவில் பழனிக் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன், டிஎஸ்பி சத்தியராஜ், காவல் ஆய்வாளர் உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழா கோயில் சார்பில் யூடியூப் மற்றும் முகநூல் ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டது.
 பக்தர்கள் குவிந்தனர்: கடந்த 14 -ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை பழனி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து வந்து பழனியில் குவிந்துள்ளனர். இவர்கள் பல்வேறு மடங்கள், கிரிவீதி மண்டபங்கள், தனியார் தோப்புகளில் தங்கியுள்ளனர்.
 திருச்செந்தூரில்...
 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா பக்தர்களின்றி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இத்திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
 பின்னர் உச்சிக்கால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் இருந்து சுவாமி அலைவாயுகந்தப் பெருமான் எழுந்தருளி திருக்கோயில் உள்பிரகாரங்களில் வலம் வந்தார்.
 கரோனா பொதுமுடக்க நடவடிக்கைகளால் சுவாமி அபிஷேகத்தில் கலந்துகொள்ள உபயதாரர்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
 ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொ) சி.குமரதுரை, உதவி ஆணையர் வெங்கடேசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 பாதுகாப்புப் பணியில் திருச்செந்தூர் காவல் உதவிக் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
 இன்றுமுதல் அனுமதி: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை (ஜன. 19) முதல் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 திருத்தணியில்...
 திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிய முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுவாமி தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் மலைக்கோயில் நுழைவு வாயிலில் உள்ள வேலுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
 கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக கோயில்களில் ஜன.18-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுத்து மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
 இந்த நிலையில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச விழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்க வேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், மலைக்கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை, சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு செல்லும் படிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
 பக்தர்களில் சிலர் மலைப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்ல முயன்றனர். அவர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், கோயில் ஊழியர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் கோயில் நுழைவு வாயிலில் உள்ள வேலுக்கு மாலை அணிவித்தும், தேங்காய் உடைத்தும் பூஜை செய்தனர்.
 விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமையிலான கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
 சுவாமிமலையில்...
 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கியது.
 இவ்விழாவின் முக்கிய நாளான தைப்பூசத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவரான சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வைர வேல் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் கோயில் உள்பிரகாரத்திலுள்ள வஜ்ர தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெற்றது.
 தமிழக அரசின் உத்தரவின்படி, கோயில்களில் வழிபட பக்தர்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டதால், காலை முதல் இக்கோயிலுக்கு வந்த பக்தர்கள், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோயில் கோபுரத்தின் அருகே பக்தர்கள் நின்று விளக்கேற்றி வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com