ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல்: உத்தரவை திரும்பப் பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல்: உத்தரவை திரும்பப் பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றத்திலும், அறிக்கைகளின் மூலமாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தமிழ் நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விளைச்சலுக்கு ஏற்றவாறு அதிக அளவில் திறக்கப்படவில்லை என்று நான் இந்த அரசுக்கு ஏற்கெனவே சுட்டிக் காட்டினேன். மேலும், கொள்முதல் நிலையங்களில் ஆளும் கட்சியினர் தலையீடு; குறைந்த அளவு நெல் கொள்முதல்; மழையால் விவசாயிகளின் நெல்மணிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் நனைந்து நஷ்டம் ஏற்படுவது போன்றவற்றையும் சுட்டிக் காட்டி, இக்குறைகளை உடனடியாகக் களைய வேண்டும் என்று இந்த அரசை பலமுறை வலியுறுத்தினேன்.

மேலும், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசின் நிதியை காரணம் காட்டி இந்த அரசு இழப்பீடே வழங்காமல் இருந்ததை நான் பொது வெளியில் சுட்டிக் காட்டிய பிறகுதான், இந்த அரசு கடந்த சில நாட்களாக பயிர் இழப்பீடுகளை வழங்கி வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை இறுதியில் பெய்த கனமழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 7 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி வீணானது. பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டுமென்று அரசை நான் வலியுறுத்தினேன். 
ஆனால், இந்த அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்றுவரை ஆய்வு செய்யவில்லை. ஆகவே, உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். 2022 - புத்தாண்டு பிறந்தது, தைத் திங்களும் பிறந்தது. வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகள் நெல்மணிகளை அறுவடை செய்து, தங்களது உழைப்பிற்கான பலனை பெறவேண்டிய இந்த நேரத்தில், இந்த அரசு ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளது, விவசாயிகளை பெருத்த கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
இதன்படி கணினி கேட்கும் விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். பிறகு அப்பதிவுகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர்கள் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் நெல் கொள்முதல் செய்வதற்கான தேதி விவசாயிக்கு தெரிவிக்கப்படும்.
பெரும்பான்மையான அப்பாவி விவசாயிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது என்றால் என்னவென்று தெரியாது. இவர்களுக்கு மற்றவர்களது உதவி தேவை. மேலும், வருவாய்த் துறை அலுவலர்களின் ஒப்புதல் தேவை. இதுபோன்ற தாமதங்களினால் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை சரியான நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் பாழாகி, தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளால், இடைத் தரகர்களிடம் தங்களது உழைப்பில் கிடைக்கப் பெற்ற நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு விற்று, சிக்கி சீரழிந்து விடுவோமோ என்ற பீதியில் உறைந்து போய் உள்ளனர். ஆளும் திமுக-வின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே இந்த அறிவிப்பை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நெல் கொள்முதல் நிலையம் தேதி அறிவிக்கும் வரை, நெற்கதிர்களை அறுவடை செய்யாமல் நிலத்திலேயே விட்டு வைக்க முடியாது. ஏனெனில் நெற்கதிர்கள் முற்றியப்பின், அறுவடை செய்வதற்கு ஓரிருநாள் தாமதம் செய்தாலே பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே விவசாயிகள், கொள்முதல் நிலையம் தேதி அறிவிக்கும் வரை காத்திருக்காமல், நெல்லை குறித்த காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். பின்பு கொள்முதல் நிலையம் அறிவிக்கும் நாள்வரை அறுவடை செய்த நெல்லை தங்களது பொறுப்பில்தான் வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் நெல் மூட்டைகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு அரசு தார்ப் பாய்கள் வழங்க வேண்டும்.
சென்ற ஆண்டு தமிழ் நாடு முழுவதும் நல்ல மழை பெய்து, நெற்கதிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இனிவரும் பிப்ரவரி மாத கால இறுதிக்குள் குறைந்தது சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயிகளின் உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைத்தே தீர வேண்டும்.
ஆகவே, ஆன்லைன் பதிவை கட்டாயமாக்காமல், ஏற்கெனவே உள்ள எளிய நடைமுறையின்படி, விவசாயிகள் தங்களது உழைப்புக்கு உண்டான பலனை பெறுவதற்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்கவும், தார்ப்பாய், சாக்கு, சணல் போன்ற பொருட்களை அதிகளவில் இருப்பு வைப்பதோடு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவைப்படும் அளவு பணியாட்களை நியமித்து, வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com