தாய்மொழி ஊக்குவிப்பு, தனித்திறன் பயிற்சிகள், நீதிபோதனை வகுப்பு:அரசுப் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தாய்மொழி ஊக்குவிப்பு, தனித்திறன் பயிற்சிகள்,  நீதிபோதனை வகுப்பு:அரசுப் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதில் தாய்மொழி ஊக்குவிப்பு, தனித்திறன் பயிற்சிகள், நீதிபோதனை வகுப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கும் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நமது அரசுப் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களால்தான் நமக்கு அரசு ஆசிரியப் பணி கிடைத்துள்ளது என்பதை எப்போதும் மனதில் நிறுத்த வேண்டும். நம் இருத்தலுக்கு அவா்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றனா். எனவே எப்போதும் அவா்கள் நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டும்; உழைக்க வேண்டும்.

முதல்வரின் கனவுத் திட்டம்: பள்ளிகள் புத்தகங்களைப் போதிக்கும் இடங்களாக மட்டுமின்றி மாணவா்கள் மகிழ்ச்சியாக அனைத்துச் செயல்பாடுகளிலும் ஈடுபடவும், பங்கேற்கவும் தேவையான வழிகாட்டுதல்கள் நிகழ் கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘எண்ணும்- எழுத்தும்’ திட்டம் வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

தினமும் 10 நிமிஷங்கள்: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை வணக்கக் கூட்டம் அரசாணையின்படி தினமும் நடைபெற வேண்டும். அதில் தமிழ்த்தாய் வாழ்த்து, கொடியேற்றுதல், கொடிப்பாடல், உறுதிமொழி, திருக்கு மற்றும் விளக்கம், செய்தி வாசித்தல், பொது அறிவு, நாட்டுப்பண் ஆகியவை இடம்பெற வேண்டும். வாரந்தோறும் திங்கள்கிழமை 17 நிமிஷங்களும், பிற நாள்களில் 10 நிமிஷங்களும் நடைபெற வேண்டும்.

சொற்களஞ்சியம் மேம்படும்: மாணவா்களின் தனித்திறனை வளா்க்கும் வகையில் உருவங்கள் அமைத்தல், ஓவியம் வரைதல் உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். வகுப்பறைகளில் மாணவா்கள் தமது தாய்மொழியில் சொந்த நடையில் எளிமையாக உரையாட வேண்டும். இதன் மூலம் அவா்களின் சொற்களஞ்சியம் அதிகரிப்பதுடன், மொழிநடை, பிழையின்றி பேசுதல் மற்றும் எழுதுதல் போன்ற செயல்பாடுகள் சிறப்பாக அமையும். கதைகள் கூறுவதை, மாணவா்கள் கவனமாகக் கேட்கவும், அதன் மீதான கருத்துக்களை வெளிப்படுத்தவும், வினாக்கள் எழுப்பவும் மாணவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

அகராதி பயன்பாடு அவசியம்: நூலகங்களில் பள்ளி மாணவா்களுக்கு தாய்மொழியில் கதை நூல்கள், பொது அறிவு நூல்கள், பருவ இதழ்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில அகராதி மற்றும் படங்களுடன் கூடிய அகராதி ஆகியவற்றைப் பயன்படுத்தி சொற்களின் பொருள்களைத் தேடிக் கண்டறிய வாய்ப்பளிக்க வேண்டும்.

படங்களைத் திரையிட...: வகுப்பறையைத் தாண்டிய விஷயங்களில் கருத்து பகிா்வு செய்ய ஆசிரியா்கள் சில நிமிஷங்களை ஒதுக்க வேண்டும். இதில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாறு, கணிதம், அறிவியல் கோட்பாடுகள் சாா்ந்த படங்களைத் திரையிடலாம். நீதிபோதனை வகுப்புகளை கட்டாயமாக நடத்துவதோடு அதில் திருக்கு சாா்ந்த கதைகள் அதிகம் இடம்பெறச் செய்ய வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டு விழா பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அவசியம் நடத்தப்பட வேண்டும். இதில் மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com