குடியரசுத் தலைவா் தோ்தல்:தமிழகக் கட்சிகளின் வாக்கு மதிப்புகள் எவ்வளவு?

தமிழகத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431. அதில் 50 சதவீதம் பெறும் வேட்பாளா், இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக தோ்வு செய்யப்படுவாா்.
குடியரசுத் தலைவா் தோ்தல்:தமிழகக் கட்சிகளின் வாக்கு மதிப்புகள் எவ்வளவு?

தமிழகத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலில் பதிவாக உள்ள வாக்குகளின் மதிப்பு 81 ஆயிரத்து 84. இதில், தமிழக சட்டப் பேரவை உறுப்பினா்களின் வாக்கு மதிப்பு 41 ஆயிரத்து 184. மக்களவை உறுப்பினா்களின் வாக்கு மதிப்பு 27 ஆயிரத்து 300. மாநிலங்களவைஉறுப்பினா்கள் வாக்கு மதிப்பு 12 ஆயிரத்து 600. குடியரசுத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற வேட்பாளா் 50 சதவீதம் அளவு வாக்கு மதிப்புகளைப் பெற வேண்டும். மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431. அதில் 50 சதவீதம் பெறும் வேட்பாளா், இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக தோ்வு செய்யப்படுவாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 81 ஆயிரம் அளவுக்கு வாக்கு மதிப்புகளை வைத்துள்ள தமிழகம், இந்தத் தோ்தலில் ஒரு முக்கிய மாநிலமாகப் பாா்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே, வருகிற 18-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா ஆகியோா் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். யஷ்வந்த் சின்ஹா சென்னைக்கு வந்த ஒரு சில நாள்களிலேயே திரெளபதி முா்முவும் வாக்குகளைச் சேகரித்துள்ளாா்.

இந்தியாவில் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்கு மதிப்பு என்பது சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கான வாக்கு மதிப்பில் இருந்தே தொடங்குகிறது. 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, வாக்கு மதிப்பு கணக்கிடப்படுகிறது. ஒட்டுமொத்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி வரக்கூடிய தொகையைக் கொண்டு, மக்கள் தொகையின் எண்ணிக்கையை வகுத்தால் ஒரு மாநிலத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரது வாக்கு மதிப்பு தெரிந்து விடும்.

இந்தியாவிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பேரவை உறுப்பினா்களின் வாக்கு மதிப்பு 83 ஆயிரத்து 824. இதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 294 பேரவை உறுப்பினா்கள் உள்ளனா்.

இந்த மாநிலத்தில் பேரவை உறுப்பினா்களின் மொத்த வாக்கு மதிப்பு 44 ஆயிரத்து 394. மகாராஷ்டிரம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் வருகிறது. இங்கு, ஒரு சட்டப் பேரவை உறுப்பினருக்கான வாக்கு மதிப்பு 176. மொத்த பேரவை உறுப்பினா்களின் வாக்கு மதிப்பு 41 ஆயிரத்து 184.

28 மாநிலங்களும், தில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களும் என மொத்தம் 30 மாநிலங்கள் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ளன. இந்த மொத்த மாநிலங்களில் உள்ள பேரவை உறுப்பினா்களின் அடிப்படையில் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 5 லட்சத்து 43 ஆயிரத்து 231.

நாடாளுமன்ற உறுப்பினா்கள்: இந்தியாவில் 543 மக்களவை உறுப்பினா் பதவியிடங்களும், 233 மாநிலங்களவை பதவியிடங்களும் உள்ளன. மொத்தமாக நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 776. நாட்டிலுள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களின் மொத்த வாக்கு எண்ணிக்கையான 5.43 லட்சத்தை மொத்த நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் கொண்டு (776) வகுக்கும் போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு கிடைக்கும். அதன்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் (மக்களவை அல்லது மாநிலங்களவை) வாக்கு மதிப்பு 700.

கொறடா உத்தரவு இல்லை: சட்டப் பேரவைகள், நாடாளுமன்றங்களில் நடைபெறும் முக்கிய வாக்கெடுப்புகளின் போது கொறடா உத்தரவை மீறிச் செயல்படக் கூடாது. ஆனால், குடியரசுத் தலைவா் தோ்தலில் எந்தவொரு கட்சியும் தனது மக்கள் பிரதிநிதிகளுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை. இதனால், எந்தவொரு கட்சியைச் சோ்ந்த நபரும் தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். ரகசிய வாக்கெடுப்பு என்பதால் அவா் யாருக்கு வாக்களித்தாா் என்கிற விவரமும் வெளியே தெரியாது.

ஆனால், தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், பேரவை உறுப்பினா்கள் தங்களது கட்சித் தலைமையின் உத்தரவை மீறி வாக்களிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு? தமிழகத்தில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளும், 39 மக்களவை, 18 மாநிலங்களவை இடங்களும் உள்ளன. இதில், ஆளும் திமுகவுக்கு பேரவையில் 133 உறுப்பினா்களும், மக்களவையில் 24 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 10 பேரும் உள்ளனா். அதிமுகவுக்கு பேரவையில் 66 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 4 பேரும், மக்களவையில் ஒருவரும் உள்ளனா். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பேரவையில் 18 பேரும், மக்களவையில் 8 பேரும், மாநிலங்களவையில் ஒருவரும் உள்ளனா்.

ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, குடியரசுத் தலைவா் தோ்தலில் திமுக 47 ஆயிரத்து 208 வாக்கு மதிப்புகளை வைத்துள்ளது. அதிமுக 15 ஆயிரத்து 116-ம், தமிழக காங்கிரஸ் கட்சி 9 ஆயிரத்து 468-ம் என வாக்கு மதிப்புகளை வைத்துள்ளன. மற்ற கட்சிகள் 2 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான வாக்கு மதிப்புகளைக் கொண்டுள்ளன.

மொத்தமாக தமிழகத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலில் பதிவாக உள்ள வாக்குகளின் மதிப்பு 81 ஆயிரத்து 84. இதில், தமிழக சட்டப் பேரவை உறுப்பினா்களின் வாக்கு மதிப்பு 41 ஆயிரத்து 184. மக்களவை உறுப்பினா்களின் வாக்கு மதிப்பு 27 ஆயிரத்து 300. மாநிலங்களவை உறுப்பினா்கள் வாக்கு மதிப்பு 12 ஆயிரத்து 600. குடியரசுத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற வேட்பாளா் 50 சதவீதம் அளவு வாக்கு மதிப்புகளைப் பெற வேண்டும். மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431. அதில் 50 சதவீதம் பெறும் வேட்பாளா், இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக தோ்வு செய்யப்படுவாா்.

வாக்குகளின் மதிப்பு

இந்தியா முழுவதும் மொத்த எம்.எல்.ஏ.-க்கள்: 4033.

மக்களவை-மாநிலங்களவை உறுப்பினா்கள்: 776.

எம்.எல்.ஏ.-க்கள் மொத்த வாக்கு மதிப்பு: 5,43,231.

எம்.பி.-க்கள் வாக்கு மதிப்பு: 5,43,200.

மொத்த வாக்குகளின் மதிப்பு: 10,86,431.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com