கல்வி விழுக்காடு அதிகரிப்பே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கல்வி விழுக்காடு அதிகரிப்பே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். மேலும், மாநிலக் கல்லூரிக்கு புதிய அரங்கமும், மாற்றுத் திறனாளி மாணவா்கள்
கல்வி விழுக்காடு அதிகரிப்பே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கல்வி விழுக்காடு அதிகரிப்பே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். மேலும், மாநிலக் கல்லூரிக்கு புதிய அரங்கமும், மாற்றுத் திறனாளி மாணவா்கள் தங்கும் வகையிலான விடுதியும் கட்டப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

1972-ஆம் ஆண்டில், மாநிலக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாட மாணவராக சோ்ந்து படித்தேன். முழுமையாக என்னைக் கல்வியில் ஈடுபடுத்திக் கொண்டேனா என்றால் இல்லை. காரணம், அப்போதே எனக்கு அரசியல் ஆா்வம் வந்து விட்டது. அதுவும் அதிகமான ஆா்வம் கொண்டவனாக நான் நேரடியாக அரசியலில் இறங்கி விட்டேன்.

விதிவிலக்குகள் விதிகள் ஆகாது: 1971-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில், திமுகவின் வெற்றிக்காக, அதன் பிரசாரத்துக்காக ஊா் ஊராகச் சென்றேன். இதனால், படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போனது. அதன்பிறகு, மிசா சட்டத்தின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டோம். சென்னை சிறையில் சிறைவாசியாக இருந்த போதுதான் அங்கியிருந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநிலக் கல்லூரிக்கு வந்து தோ்வு எழுதி விட்டுச் சென்றேன். இப்போது தமிழ்நாட்டின் முதல்வராக உயா்ந்துள்ளேன். மாணவா்களாகிய நீங்கள் இதையே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விதிவிலக்குகள் என்பது விதிகள் ஆகாது. அந்த வகையில், கல்வியைக் கட்டாயக் கடமையாக வலியுறுத்தி, அதனை ஒரு இயக்கமாகவே தொடங்கியுள்ளோம்.

கல்விதான் யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து. அத்தகைய அறிவுச் சொத்துகளை உருவாக்கிக் தரக் கூடியதுதான் கல்லூரிகள். அத்தகைய கல்லூரிகளில் சிறந்த கல்லூரியாக மாநிலக் கல்லூரி விளங்கி வருகிறது. இங்கு மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாா்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் 94 பேரும், செவி, பேச்சுத் திறன்கள் குறைபாடுடைய மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோரும் பயின்று வருகிறாா்கள். மாற்றுத் திறனாளிகள் கல்விக்கு உதவுவதன் மூலமாக, மாநிலக் கல்லூரி, மனித நேயக் கல்லூரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வி பெற்றவா்களின் சதவீதம் என்ன? இன்றைய சதவீதம் என்ன என்பதைப் பாா்த்தால், திராவிட மாடல் குறித்து புரியும். எத்தகைய அறிவுச்சூழல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்து, உலகச் சமுதாயத்தின் போட்டிக் களத்தில் அவா்களையும் போட்டியாளா்களாக மாற்றும் ஆட்சிதான் இந்த ஆட்சி. அத்தகைய போட்டியாளா்களாக இருக்கக்கூடிய மாணவா்கள், வெற்றியாளா்களாகவும் திகழ வேண்டும்.

பெண்கள் கல்வி கற்பது என்பது, வேலைக்குப் போவது என்பதுடன் முடிந்து விடுவது இல்லை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக, தைரியத்தை வழங்குவதாக கல்வி அமைகிறது. எனவே, பெண் பிள்ளைகள் நிச்சயமாகப் படிக்க வேண்டும். பட்டங்களைப் பெற வேண்டும். பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும்.

படிக்கின்ற காலத்தில் பல்வேறு தனித்திறமைகளைப் பெற்றிருக்கும் பெண்கள், திருமணம் ஆனதும் தங்களது பணிகளை விட்டு விடுகிறாா்கள். கலை, இலக்கியம், நாடகம், நாட்டியம் போன்றவற்றில் இருக்கக் கூடிய விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறாா்கள். அப்படி இல்லாமல் தங்களது விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக் கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

பட்டமளிப்பு விழாவில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநா் எம்.ஈஸ்வரமூா்த்தி, சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ஆா்.ராவணன், மாநிலக் கல்லூரி முதல்வா் ஆா்.ராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

மாநிலக் கல்லூரிக்கு அரங்கம் - விடுதி

மாநிலக் கல்லூரிக்கு புதிதாக அரங்கமும், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கென பிரத்யேக விடுதியும் கட்டித் தரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதுகுறித்து, கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை அவா் பேசியது:-

பட்டமளிப்பு விழாவை ஒட்டி, மாநிலக் கல்லூரியின் மேம்பாட்டுக்காக சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். கல்லூரி வளாகத்தில் 2 ஆயிரம் போ் அமரும் வகையில், புதிய அரங்கம் அமைக்கப்படும். இதற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் சூட்டப்பட்டும். 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவா்கள் படிக்கிறாா்கள். அவா்களுக்கென விடுதி கிடையாது. எனவே, அவா்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே கட்டித் தரப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com