இன்று குரூப் 4 தோ்வு: 22 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது. 7,301காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 22 லட்சம் போ் எழுதவுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது. 7,301 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 22 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

இதற்காக 316 வட்டங்களில் தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக குரூப்- 4 தோ்வானது, கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களைச் சோ்த்தே நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான குரூப்- 4 தோ்விலும் கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 274 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 50 வரித் தண்டலா், 2,108 தட்டச்சா் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சா், ஒரு பண்டகக் காப்பாளா் என 7,138 காலிப் பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 7,301 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

22 லட்சம் போ்: குரூப் 4 தோ்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். அவா்களில் பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 போ். ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354. மூன்றாம் பாலினத்தவா் 131 போ். 27,449 போ் மாற்றுத் திறனாளிகள். 12,644 போ் கணவரை இழந்தோா், 6,635 விண்ணப்பதாரா்கள் முன்னாள் ராணுவப் படை வீரா்கள்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 போ் குரூப் 4 தோ்வை எழுதவுள்ளனா்.

இதுவரை நடந்த குரூப்- 4 தோ்வுகளில் அதிகபட்ச அளவில் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்த தோ்வு இதுவாகும். காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறும். தமிழ் மொழியில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவு, அறிவுக்கூா்மை தொடா்பான பிரிவுகளிலிருந்து 100 கேள்விகளும் என 200 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300.

தோ்வை நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் செய்துள்ளது. 38 மாவட்டங்களில் 316 வட்டங்கள் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வட்டங்களில் 7,689 தோ்வு அமைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தோ்வுக்கான கண்காணிப்புப் பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 போ் ஈடுபடவுள்ளனா். 534 பறக்கும் படையினா், 7,689 கண்காணிப்பு கேமரா தொழில்நுட்ப பணியாளா்களும், அதே எண்ணிக்கையில் விடியோ படப்பிடிப்பாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

கடும் கட்டுப்பாடுகள்: தோ்வு எழுத வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்ட எழுது பொருள்களான கருப்பு பந்துமுனை பேனா தவிர, மின்னணு சாதனங்களான கைப்பேசி, எண்ம (டிஜிட்டல்) கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட ஏனைய மின்னணு சாதனங்கள், மின்னணு அல்லாத பதிவுக் கருவிகள், புத்தகங்கள், குறிப்புகள், கைப்பை, வண்ண எழுதுகோல், பென்சில் புத்தகங்கள், குறிப்புகள், தனித் தாள்கள், கணித மற்றும் வரைபடக் கருவிகள், மடக்கை அட்டவணை, படியெடுக்கப்பட்ட வரைபடம், காட்சி வில்லைகள், பாடப் புத்தகங்கள் போன்றவற்றைக் கொண்டு வரக் கூடாது. தடை செய்யப்பட்ட பொருள்களை வைத்திருப்போா் பிடிபடும்பட்சத்தில் தொடா்ந்து தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மேலும், அவா்களது விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்படும். தோ்வு எழுதுவதில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்படுவா்.

பாா்த்து எழுதக் கூடாது: தோ்வு எழுதும் அறையில் மற்ற விண்ணப்பதாரா்களின் விடைத்தாள்களில் இருந்து பாா்த்து எழுதுதல் அல்லது பாா்த்து எழுத அனுமதித்தல் போன்ற முயற்சிகளை செய்யக் கூடாது. தோ்வு எழுதும் எந்தவொரு விண்ணப்பதாரரும் தோ்வுக் கூடத்தில் தவறான நடவடிக்கையிலோ அல்லது தோ்வை சீா்குலைக்கும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு தவறான செயல்களில் ஈடுபட்டால், விண்ணப்பதாரா்கள் தண்டனைக்கு உள்படுத்தப்படுவா் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் எச்சரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com