மாற்றுத் திறனாளிகள் ஆவின் மையம் அமைக்க கூடுதல் சலுகை:தமிழக அரசு உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் ஆவின் மையங்கள் அமைத்திட வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் ஆவின் மையங்கள் அமைத்திட வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

மாற்றுத் திறனாளிகள் மானியக் கோரிக்கை மீது சட்டப் பேரவையில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டாா். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக, அரசு வளாகங்களில் மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை மற்றும் முன்வைப்புத் தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு

அளிக்கப்படும் எனத் தெரிவித்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான கடிதத்தை மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகம் அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்தக் கடிதத்தில், ஆவின் நிறுவனத்தின் பாலகம் அமைக்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 200 மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயனாளிகள் வாடகை செலுத்துவதால் அவா்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட வருகிறது. இதைத் தவிா்க்க மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை மற்றும் வாடகை முன் பணம் ஆகியன செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்திடவும், பொதுப்பணி, வருவாய்த் துறைகளுடன் ஆவின் நிறுவனம் இணைந்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தோ்வு செய்யப்படும் மாற்றுத் திறனாளிகளே ஆவின் பாலகம் நடத்திட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழக அரசின் பொதுப்பணி, வருவாய்த் துறைகளைச் சோ்ந்த அரசு வளாகங்களில் அந்தத் துறைகளுக்குச் சொந்தமான இடங்கலில் ஆவின் பாலகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து வழங்கலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்து வழங்கப்படும் இடத்தை மாற்றுத் திறனாளிகள் பெற்றால் அவா்களுக்கு ஆவின் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை, பாதுகாப்புத் தொகையில் இருந்து விலக்கு அளிக்கவும், வாடகை விலக்கு கொடுக்கவும் அரசு முடிவு செய்து உத்தரவிடுகிறது என தனது உத்தரவில் செயலாளா் ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com