சேலம்: கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க அலைகழிப்பு

சேலம் மாவட்டத்தில், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம்: கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க அலைகழிப்பு

சேலம் மாவட்டத்தில், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். 

சேலம் மாவட்டத்தில், வசித்து வரும் பகுதியில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராகி,  விவசாயிகள் வட்டியில்லா பயிர் கடன் பெற்று வந்த நிலையில் , தற்போது, நிலம் இருக்கும் கிராமத்திற்கு அருகில் இயங்கும் கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினராகி, பயிர் கடன் பெற்றுக் கொள்ளுமாறுக் கூறி, கூட்டுறவு கடன் சங்கங்கள்,  கோப்புகளை திருப்பிக் கொடுத்து வருவதால் விவசாயிகள் அலைகழிப்பு ஆளாகி வருகின்றனர். வசிப்பிடங்களில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன் பெற்றுக் கொள்ள, மீண்டும் அனுமதிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர் செய்யும் நிலத்தின் அளவு மற்றும் பயிரிடப்பட்டுள்ள பயிரின் வகைக்கு ஏற்ப, வட்டி இல்லாப் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் விவசாயிகளுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலம் எந்த கிராமத்தில் இருப்பினும், குடியிருந்து வரும் பகுதியில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி, நிலத்திற்கான‌ பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை கூட்டுறவு சங்க செயலரிடம் சமர்ப்பித்து, வட்டியில்லா பயிர் கடன் பெற்று வந்தனர்.

கடன் பெற்ற ஓராண்டுக்குள்,  கடனை முறையாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு, எவ்வித வட்டியுமின்றி,  கொடுத்த கடன் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு,  புதியதாக மீண்டும் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், கடந்தாண்டு பெற்ற பயிர் கடன் தொகையை செலுத்தி விட்டு,  வழக்கம்போல், நிகழாண்டு அதே கூட்டுறவு கடன் சங்கங்களில் மீண்டும் வட்டியில்லா பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, ஏற்கனவே உறுப்பினராக இருந்து வரும், வசிப்பிட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில் இனி கடன் வழங்க முடியாது எனக்கூறி,  எந்த கிராமத்தில் விவசாய நிலம் உள்ளதோ அந்த கிராமத்திற்கு உட்பட்ட கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று, புதிய உறுப்பினராகி,  பயிர் கடன் பெற்றுக் கொள்ளுமாறு கோப்புகள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நேரத்திற்குள் பயிர் கடன் பெற முடியாததால், பயிர் செய்ய வழியின்றி  விவசாயிகள் பெரும் அலைகழிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

எனவே, குடியிருந்து வரும் பகுதியில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களிலேயே, மீண்டும் வட்டியில்லா பயிர் கடன் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:

வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் குடியிருந்து வரும் பெரும்பாலான விவசாயிகளுக்கு, வாழப்பாடி அருகிலுள்ள முத்தம்பட்டி, கொட்டவாடி, சிங்கிபுரம், துக்கியாம்பாளையம், சின்னகிருஷ்ணாபுரம், சேசன்சாவடி, மத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் விளைநிலங்கள் உள்ளன.

வாழப்பாடியில் குடியிருந்து வருவதால் இங்கு இயங்கும் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி, பல ஆண்டுகளாக வட்டியில்லா பயிர் கடன் பெற்று வந்தோம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பெற்ற பயிர் கடன் தொகையை திருப்பி செலுத்தி விட்டு, புதிதாக பயிர் கடன் வழங்குமாறு விண்ணப்பித்திருந்தோம். ஆனால், எந்த கிராமத்தில் விளைநிலம் உள்ளதோ அந்த கிராமத்திற்கு உட்பட்ட கூட்டுறவு கடன் சங்கத்தில் தான் பயிர் கடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறி, எங்களது கோப்புகளை திருப்பிக் கொடுத்து விட்டனர். இதனால், குறித்த நேரத்தில் பயிர் கடனை பெற முடியாமலும், பயிர் செய்ய வழியின்றியும் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

இது மட்டுமின்றி, பல விவசாயிகளுக்கு, அருகருகே வெவ்வேறு கிராம எல்லைகளில் விளைநிலங்கள் உள்ளன. இதனால் அந்தந்த விளைநிலங்களுக்கு சம்பந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சென்று கடன் பெற்றுக்கொள்ள நிர்பந்தம் செய்வதால், ஒரே விவசாயி ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் புதிதாக உறுப்பினராகி, பயிர் கடன் பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். ஒரு விவசாயி ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராவதிலும், பயிர் கடன் பெறுவதிலும், காலதாமதமும் சிரமமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் வசித்து வரும் பகுதியில் இயங்கி வரும், ஏற்கனவே, அவர்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களிலேயே, மீண்டும் வட்டியில்லா பயிர் கடன் பெற்றுக் கொள்ள தமிழக அரசும், சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com