
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றும் மாணவர்கள்.
நாமக்கல்லில், உலக சாதனைக்காக சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்கள் 218 பேர் தொடர்ச்சியாக சிலம்பம் சுழற்றி சாதனை படைக்கும் நிகழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பரமத்தி வேலூரைச் சேர்ந்த இளம் வேங்கை கலைக்கூடம், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகியவை சார்பில் நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் உலக சாதனைக்கான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த சாதனை நிகழ்ச்சியில் தமிழக முழுவதும் உள்ள சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்கள் 218 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு சிலம்பம் சுழற்றி வருகின்றனர்.
இதற்கு முன் தூத்துக்குடியில் 220 சிலம்ப வீரர்கள் பங்கேற்று 1.30 மணி நேரம் மட்டும் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்வில் இடம் பெற்றுள்ளனர். இதனை முறியடிக்கும் விதமாக இரண்டு மணி நேரம் சிலம்பம் சுழற்றும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பங்கேற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தனிநபர் உலக சாதனை நிகழ்த்தும் போட்டிகளும் நடைபெற்று வருகிறது.