ரிப்பன் மாளிகையை பார்த்தால் கருணாநிதி நினைவுதான்: மு.க.ஸ்டாலின்

மாலையிலே வண்ண விளக்குகளால் ஜொலிக்கக்கூடிய ஒரு சிறப்பான ஏற்பாட்டை  செய்து இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (2.6.2022) சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தை பொதுமக்களின் பார்வைக்காக அர்ப்பணித்தார். 

இதன்பிறகு, அவர் ஆற்றிய உரை:

"மாநகராட்சி கட்டடமான இந்த ரிப்பன் கட்டடம் காலையில் வெள்ளை நிறக் கட்டடமாக தோன்றினாலும், மாலையிலே வண்ண விளக்குகளால் ஜொலிக்கக்கூடிய ஒரு சிறப்பான ஏற்பாட்டை  செய்து இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநகராட்சி ரிப்பன் கட்டமானது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் ஆகும். இதுபோன்ற கட்டடங்களை எல்லாம் நான் பள்ளிக்கூடத்திலே மாணவனாக படித்துக் கொண்டிருக்கின்றபோது அந்த பள்ளியிலிருந்து சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வார்கள். அப்படி அழைத்துச் செல்லும்போது சென்னையிலுள்ள முக்கியமான இடங்களான அடையாறு ஆலமரம், அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம், ரிப்பன் கட்டடம், விக்டோரியா மகால் போன்ற கட்டடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்லப்பட்டு அவற்றை எல்லாம் சுற்றி சுற்றி வந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன். அப்படி வேடிக்கை பார்த்தவன் இன்றைக்கு இந்த கட்டடத்தை விளக்கெரிய வைக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்றால் உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன். 

அதுமட்டுமல்ல, 1996ஆம் ஆண்டு நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது நம்முடைய தலைவரிடத்திலே நம்முடைய கட்சி முன்னோடிகள் அத்தனைபேரும் சென்று, இந்தமுறை அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று போராடினார்கள்.

ஆனால் மு. கருணாநிதி எனக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை. அதற்குப்பிறகு ஆட்சி அமைந்து, அமைச்சரவை அமைக்கப்பட்ட பிறகு, நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த இந்த மாநகராட்சியினுடைய தேர்தலை நாம் நடத்தினோம். அப்படி நடத்தியபோது மேயர் வேட்பாளராக அதுவும் மக்களால் முதல்முறையாக தேர்ந்தெடுக்கக்கூடிய மேயராக நான் வரவேண்டும் என்று அவர் முடிவு செய்து, என்னை வேட்பாளராக நிறுத்தினார்கள். நாம் வெற்றி பெற்றோம். வெற்றி பெற்றதற்கு பிறகு இந்த மாநகராட்சியில் பதவியேற்பதற்கான நாள் குறிக்கப்பட்டு, அதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

அதற்குரிய அழைப்பிதழை அவர் இடத்தில் நாங்கள் எல்லாம் சென்று காண்பித்தோம். அப்போது, அந்த அழைப்பிதழின் பின் அட்டையில் ரிப்பன் மாளிகையின் படம் இருந்தது. அதனை அவர் ஒருமுறைக்கு இருமுறை பார்த்தார். ரிப்பன் கட்டடத்தை உற்றுஉற்று பார்த்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அருகிலிருந்து மூத்த கட்சி முன்னோடிகள் மற்றும் அமைச்சர்களிடத்தில், அவர், எல்லோரும் ஸ்டாலினை அமைச்சராக்கி ஒரு அறையில் கொண்டு போய் உட்கார வைக்கப் பார்த்தீர்கள். ஆனால் இப்போது அவரை மேயராக்கி இவ்வளவு பெரிய கட்டத்தில் உட்கார வைத்திருக்கிறேன் என்று பெருமையாக சொன்னார். அதுதான் என் நினைவிற்கு வருகிறது. நான் அடிக்கடி இந்த வழியாக போகும்போதெல்லாம், இந்த கட்டடத்தை பார்த்து அவர் சொன்னதைத் தான் நினைத்து கொண்டு இருப்பேன்.

அந்த கட்டடத்தை எல்லோரும் பாராட்டக்கூடிய வகையிலே, இதற்கு மெருகூட்டுகின்ற வகையிலே வண்ண வண்ண விளக்குகளால் அமைத்து ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்திருக்கக்கூடிய மேயருக்கும், துணை மேயருக்கும், அதேபோல இந்த துறையினுடைய செயலாளர் சிவ் தாஸ் மீனாவுக்கும், ஆணையருக்கும் என்னுடைய இதயபூர்வமான வணக்கத்தையும், வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்து, உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். வணக்கம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com