தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 
தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: அமைச்சர் சேகர் பாபு


சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்ய உள்ளதாக அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், அறநிலையத் துறை துணை ஆணையருமான சி.ஜோதி பொது தீட்சிதா்களுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பினாா். இதற்கு பொது தீட்சிதா்கள் ஆட்சேபம் தெரிவித்து, கடந்த 30-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினா்.

இதற்குப் பதிலளித்து ஆணையா் கண்ணன்,  சிதம்பரம் நடராஜா் கோவில் நிா்வாகத்தைச் சீரமைக்கும் வகையில் கோயிலின் அலுவல்கள் குறித்து விசாரிக்க குழுவை நியமிக்க ஆணையருக்கு அதிகாரம் உண்டு. கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்தி இந்தக் கோவிலில் பக்தா்கள் வழிபட அரசு அனுமதி அளித்தது.

மேலும், உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கனக சபை மண்டபத்தில் பக்தா்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்யவும் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைகளில் பொது தீட்சிதா்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய உரிமைகள் மீறப்படவில்லை. பல்வேறு தீா்ப்புகளில் நடராஜா் கோவில் பொதுக் கோவிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவில் விவரங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க அரசியல் சட்ட விதிகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அரசாணை நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதற்கில்லை. எனவே, அறநிலையத் துறை குழுவினா் ஆய்வு மேற்கொள்ள அவா்களுடன் இணைந்து செயல்படுமாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆய்வு தொடா்பான அரசாணையை திரும்பப் பெறவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது தீட்சிதா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், மயிடுலாடுதுறை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இன்று சனிக்கிழமை மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தைச் சநத்தித்தார். தருமபுரம் ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையும் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது. 

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற அமைச்சர் சேகர் பாபு, பின்னர் குருஞான சம்பந்தர் விருந்தினர் மாளிகையைத் திறந்து வைத்தார். இதையடுத்து 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, திருக்கடையூர் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்தவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூர் கோவில் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் எந்தவிதமான புகாரும் சர்ச்சையும் எழவில்லை. அதனால் அரசு தலையிடாது. 

ஆனால், தில்லை நடராஜர் கோவில் குறித்து பல புகார்களும் சர்ச்சைகளும் வந்துள்ளன. 

அந்தப் புகார் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றுதான் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதில், திருக்கோவிலை அறநிலையத்துறை ஏற்கும் என்று எங்கும் குறிப்பிடவில்லை.  

சிதம்பரம் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என்றும், ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அறநிலையத்துறை தலையிடாது என சேகர்பாபு கூறினார்.

மேலும், சிறப்பாக நிர்வகிக்கும் கோவிலை கையிலெடுக்க முயற்சிக்கக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com