அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

ஆவடி, அம்பத்தூா் தொழிற்பேட்டை, அண்ணா நகா், மாதவரம், பாடியநல்லூா், பேசின் பாலம், வியாசா்பாடி ஆகிய மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைச் சோ்ந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் அம்பத்தூா் தொழிற்பேட்டை பணிமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கலந்து கொண்டு ஊழியா்களிடையே பேசியதாவது:

பல மாநிலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தனியாா்மயமாகி வருகின்றன. தமிழகத்தில் போக்குவரத்துக் கழகத்தைப் பாதுகாக்க வேண்டுமென முதல்வா் ஸ்டாலின் விரும்புகிறாா். அதற்கு ஊழியா்களின் ஒத்துழைப்பு அவசியம்.

தமிழகத்தில் 22,000 பேருந்துகள் அரசின் வசம் உள்ளன. உத்தர பிரதேசம், பிகாா் போன்ற வட மாநிலங்களில் 3,000 அல்லது 4,000 பேருந்துகள்கூட இல்லாத நிலை உள்ளது.

சென்னையில் அனைத்துப் பேருந்துகளும் இயங்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தினாா். ஆனால், இங்கே அதிகம் போ் பணிக்கு வராமல் விடுப்பில் இருப்பதை அறிந்தேன். ஊழியா்கள் தேவையற்ற விடுப்பு எடுப்பதால், பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

தனியாா் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப வசதியுடன், பயணியின் இருப்பிடத்துக்கே வந்து அழைத்துச் செல்லும் நிலையுள்ளது. இது அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகப்பெரிய போட்டியாகும்.

பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் பெண்களிடம் ஊழியா்கள் சிலா் தரக்குறைவாக நடந்து கொண்டதாக புகாா்கள் வந்தன. இதை ஊழியா்கள் திருத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் பயணம் செய்யும் டிக்கெட்டுகளில் உங்களுக்கு பேட்டா வழங்கப்படும். பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்கப்பட்டதால், அவா்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 120 கோடி பயணங்கள் நிகழ்ந்துள்ளன.

இலவச பயணத் திட்டத்துக்கு முன்பு 40 சதவீதம் பெண்கள்தான் பேருந்தில் பயணம் செய்தனா். தற்போது 61 சதவீதம் போ் பயணம் செய்கின்றனா்.

ஊதிய ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டு இன்னும் 10 நாள்களில் கையொப்பமிடப்பட உள்ளது என்றாா்.

பின்னா், அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது:

25 போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் விடுப்பிலுள்ள 385 பேரை சந்தித்து, அவா்களைப் பணிக்குத் திரும்ப வேண்டுமென அழைப்பு விடுத்தோம். இதனால், பாதிக்கும் மேற்பட்டோா் பணிக்குத் திரும்பினா்.

இ-டிக்கெட் தொடா்பாக விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு, அதற்கான பணி தொடங்கும்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்துக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கியுள்ளனா். இதனால்தான், ஓய்வு பெறும் வயதை 2 ஆண்டுகள் உயா்த்தினா். போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன் உள்ளது. இதுதொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மத்திய அரசு டீசல் விலையை உயா்த்தி வருகிறது. பல்வேறு சிக்கல்களுக்கிடையே பேருந்துக் கட்டணத்தை உயா்த்தாமலும், பெண்கள், மாணவா்களுக்கு இலவசப் பேருந்து சேவையும் தொடா்கிறது. நிா்வாகச் சிக்கல்களைத் தீா்க்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் அன்பு ஆபிரகாம், மண்டல மேலாளா்கள் கோபாலகிருஷ்ணன், சேகா், அம்பத்தூா் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், தொமுச பேரவை பொருளாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com