கூத்தாநல்லூரில் ஹிந்து, முஸ்லிம் இணைந்து நடத்திய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை வியாழக்கிழமை நடத்தினர்.
விமானக் கலசத்தில் ஊற்றப்படும் புனித நீர்
விமானக் கலசத்தில் ஊற்றப்படும் புனித நீர்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை வியாழக்கிழமை நடத்தினர்.

கூத்தாநல்லூர் அருகேயுள்ள பண்டுதக்குடி, அக்கரைப் புதுத்தெருவில் எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன், பாலவிநாயகர், பாலமுருகன் கோயில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பண்டுதக்குடி கிராமவாசிகள், அக்கரைப் புதுத் தெருவாசிகள், இஸ்லாமியர்கள் மற்றும் பக்தர்கள் ஏற்பாட்டின்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட மேடையில் புனித நீர் வைக்கப்பட்டு, புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன், முதல் கால யாக பூஜையுடன் தொடங்கப்பட்டது.

யாகசாலையில் பூர்ணாஹுதி
யாகசாலையில் பூர்ணாஹுதி

தொடர்ந்து, இரவு மருந்து சார்த்தப்பட்டது. வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையுடன், கோ பூஜை, சரஸ்வதி ஹோமத்துடன், பூர்ணாஹுதி செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து, 10.15 மணிக்கு, திருவண்டுதுறை பி. கீர்த்திவாசன் குருக்கள் தலைமையில், ஆலய அர்ச்சகர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் 10 குருக்கள், யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரை, கிராமவாசிகள் மற்றும் இஸ்லாமியர்கள் முன்னிலையில் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். காலை 10.25 மணிக்கு, கீர்த்திவாசன் குருக்கள் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.

புனித நீர் ஊர்வலம்
புனித நீர் ஊர்வலம்

கும்பாபிஷேக விழாவில், நகரமன்ற உறுப்பினர் ர. முகம்மது காதர் மைதீன், நகரமன்ற முன்னாள் உறுப்பினர் கொய்யா என்ற பீ. மீரா மைதீன், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சமூக நல்லிணக்கத்துடன் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து நடத்திய கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com