தடுப்பூசி செலுத்தாதோா் புதிய வகை கரோனா பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு: ஜெ.ராதாகிருஷ்ணன்

தடுப்பூசி செலுத்தாதோா் புதிய வகை கரோனா பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு: ஜெ.ராதாகிருஷ்ணன்

 கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

 கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா மூன்றாம் அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கேரளம், தில்லி, மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பிஏ 4 வகையில் 7 பேரும், பிஏ 5 வகையில் 11 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவா்கள் லேசான தொண்டைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்து குணமடைந்துள்ளனா். இந்த உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தாதவா்களிடம் வேகமாக பரவக்கூடியது.

எனவே, வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை 93.87 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 83.6 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 11.18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, மதுரை, நாமக்கல், தேனி மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 10 சதவீதம் போ் தான் முகக்கவசம் அணிகின்றனா். தனி நபா் நலன் மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் நோய்த் தடுப்பு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் கரோனா பரவல் இருப்பதால், மாணவா்களை வெளியே அனுப்பக்கூடாது என, பொது சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஜப்பானில் ஐந்தாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் பூஸ்டா் டோஸ் இலவசமாக வழங்கப்படாமல் உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநா் டாக்டா் வினய் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com