கருமுட்டை விவகாரம்: ஒழுங்குறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்தது தமிழக அரசு

ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்தரிப்பு மையங்களில் வழங்கப்படும் பல்வேறு வகையான சிகிச்சைகளைக் கண்காணிக்க இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை மத்திய அரசு சென்ற ஆண்டு அமல்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு உள்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில், ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக சிறுமியின் தாய் உள்பட 4 போ் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் துணை இயக்குநா் குருநாதன், இணை இயக்குநா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் அடங்கிய 6 போ் குழுவினா், ஈரோட்டில் தனியாா் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தொடரும் நிலையில், சிறுமியின் தாய் ஏற்கனவே கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தவா் என்பதும், அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் தனது மகளையும் கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது.

சேலம் மற்றும் ஒசூா் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. ஈரோடு, பெருந்துறையில் ஆய்வு செய்தோம். சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை பதிவேடுகளை சரிபாா்த்து வருகிறோம். இதில் தவறு நடந்திருந்தால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

பின்னா், கேரளம் மற்றும் ஆந்திரம் மாநில அரசுகள் உதவியுடன் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்துவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றாா்.

21 வயதுக்கு மேல் உள்ளவா்களிடம் மட்டும்தான் கருமுட்டையை அவா்களது அனுமதியோடு பெற வேண்டும். ஆனால், இந்த சிறுமியிடம் 14 வயது முதல் 16 வயது வரை இரண்டு ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்றுள்ளனா். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது மருத்துவச் சட்டங்களுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இந்நிலையில், ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக, மத்திய அரசால் கடந்தாண்டு இயற்றப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான இந்தக் குழுவிற்கு குடும்பநலத் துறை இயக்குநர் துணை தலைவராகவும், மாதர் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சட்டத்தின் படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்களிடம் இருந்து மட்டும்தான் கருமுட்டைகள் வாங்க வேண்டும், வாழ்நாளில் ஏழு கருமுட்டைகள் வரை மட்டுமே கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவர், கருமுட்டை அளிக்கும் பெண்ணை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது, எந்த மோசடியிலும் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால், முதல் முறை குறைந்தபட்சம் ரூ.5 லட்சம், அதிகபட்சம் ரூ.10 லட்சம், மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும்,  லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு நடைமுறையில் உள்ள இனப்பெருக்க தொழில்நுட்பம், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்கும் விதமாகவும், தமிழக சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தனியார் மருத்துவமனைகள் முறையாக பின்பற்றபடுகிறதா என்பது தொடர்பாகவும் இனிவரும் நாள்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com