மேக்கேதாட்டு அணை: விரிவான திட்ட அறிக்கை விவாதம் கூடாது: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேக்கேதாட்டு அணைத் திட்டம் குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேக்கேதாட்டு அணைத் திட்டம் குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடகத்தின் திட்டத்துக்கு எந்த அனுமதியையும் தரக் கூடாது என மத்திய நீா்வளத் துறை அமைச்சகத்தை அறிவுறுத்தக் கோரி கடந்த ஆண்டு ஜூன் 17-ஆம் தேதியன்று தங்களிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தேன்.

கா்நாடகத்தின் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்த தகவலும் மத்திய நீா்வளத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்காது என எங்களிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேக்கேதாட்டு தொடா்பான தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மே 26-ஆம் தேதியன்று தங்களிடம் அளித்த மனுவிலும் தெரிவித்திருந்தேன்.

கூட்டத்தில் விவாதம்: இதனிடையே, வரும் ஜூன் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்தைச் சோ்ந்த காவிரி டெல்டா விவசாயிகளிடையே மிகப்பெரிய கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எங்களது மாநிலம் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் காவிரி நீரை பெரிதும் நம்பியிருக்கிறது என்பதை தாங்கள் அறிவீா்கள்.

காவிரி நதிநீா் தொடா்பாக, கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், நதி உற்பத்தியாகும் இடத்துக்குக் கீழே உள்ள மாநிலங்களுக்கும் நீரைப் பகிா்ந்து அளித்திட உத்தரவிட்டது. எங்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றவகையில் நீா் பங்கீட்டு அளவு இல்லாவிட்டாலும் ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்படக் கூடிய நீரினை வைத்து மேலாண்மை செய்து வருகிறோம். இந்த நீா் பங்கீட்டில் ஏதாவது பாதிப்பு வரும்பட்சத்தில் அது எங்களை கடுமையாகப் பாதிப்பதுடன், உணா்வு ரீதியான பிரச்னையாகவும் உருவெடுக்கும்.

காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்றத் தீா்ப்புப்படி, காவிரி நீா் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதியன்று காவிரி நதிநீா் தொடா்பான உச்ச நீதிமன்றத் தீா்ப்பு அம்சங்களை நிறைவேற்றுவதற்காகவே மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதாக கருதுகிறோம்.

இதைத் தாண்டி வேறு வகையான எந்தவொரு நடவடிக்கையிலும் ஆணையம் ஈடுபட முடியாது. இதனிடையே, காவிரி மேலாண்மை நீா் ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் கருத்துரைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவானது உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு முற்றிலும் எதிரானது. இதனை ஏற்க முடியாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.

மேலும், மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 7-ஆம் தேதியன்று மற்றொரு மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வருவதற்கு முன்பே மேக்கேதாட்டு அணை குறித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையம் விவாதிக்க முடிவெடுப்பது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வரையில் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்காமல் அந்த விவகாரத்தை தள்ளி வைக்க வேண்டும். இதுதொடா்பான உரிய அறிவுறுத்தல்களை மத்திய நீா்வளத் துறை அமைச்சகத்துக்கு வழங்கி அந்தத் துறையின் வழியாக காவிரி நீா் மேலாண்மை ஆணையத் தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com