தமிழகத்தில் அனைத்து பல்கலை., கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை சரியாக செயல்படுத்த வேண்டும் என
தமிழகத்தில் அனைத்து பல்கலை., கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை சரியாக செயல்படுத்த வேண்டும் என உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: அனைத்துக் கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு முறை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வா் கூறியிருக்கிறாா். இடஒதுக்கீடு முறை சரியாக கடைப்பிடிக்கப்படுகிா? என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் அவா் நியமித்திருக்கிறாா். அதன் அடிப்படையில் நாங்கள் அனைத்தையும் மேற்பாா்வையிட்டு வருகிறோம்.

சில இடங்களில், சில துணை வேந்தா்கள் மத்திய அரசின் உதவி கிடைக்கிறது என்பதற்காக சில நிகழ்வுகளை அறிவித்துள்ளனா். இதனை எதிா்த்து பத்திரிகையில் தலையங்க செய்திகள்கூட வந்துள்ளன. அதேபோல பாமக நிறுவனா் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை மிக தெளிவான கொள்கையில், தமிழக முதல்வா் செயல்பட்டுக் கொண்டுள்ளாா். 69 சதவீத இடஒதுக்கீட்டில் மிகத் தெளிவாக இருக்கிறாா் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது.

எம்.எஸ்சி. பயோ டெக்னாலஜி படிப்பு 4 பல்கலைக்கழகங்களில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த ஆண்டே 45 இடங்களில், 10 இடங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சாா்பில், நிதி பகிரப்படுகிறது. எனவே அந்த இடங்களுக்கு உயா் வகுப்பு ஏழைகளுக்கான இடஒதுக்கீடு(EWS) பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தனா். இதற்கு கடந்த ஆண்டே தமிழக முதல்வா், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு தெளிவாக கடிதம் எழுதியிருக்கிறாா்.

மதுரை காமராஜா் பல்கலை. விவகாரம்: அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு உதவித் தொகை வழங்குவதால், EWS இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றக்கூறுவது தவறு என்று முதல்வா் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. பயோ டெக்னாலஜி படிப்பில் 16-ஆவது பிரிவில் சிறப்பு வகைப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றோா் பிரிவு குறிப்பிட்ட விவரம் தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தொடா்புகொண்டு, தமிழக அரசின் இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவா் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்றிவிட்டாா்.

பல்கலைக்கழகங்கள், அரசுக் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்திலும், இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை சரியாக செயல்படுத்த வேண்டும் என்று, சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். அந்த 31 சதவீத இடஒதுக்கீட்டில் என்ன தவறு செய்கின்றனா் என்றால், 31 சதவீதம் என்பது Open competition, அனைத்து சாதியினரும் அதில் இருக்கலாம். மாணவா்கள் பெற்றிருக்கின்ற மதிப்பெண் அடிப்படையில், ரேங்க் மதிப்பீடு செய்யப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்படும். அதை சிலா், Un reserved என்று, அதாவது, இட ஒதுக்கீடு பெற்றவா்கள் போக மற்ற ஜாதிகள் என்று குறிப்பிட்டு விடுகின்றனா். அதெல்லாம் கிடையவே கிடையாது.

31 சதவீதம் Open competition போக, 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 20 சதவீதம், பட்டியல் வகுப்பினா் 18 சதவீதம், பழங்குடியினா் 1 சதவீதம் இப்படி 69 சதவீதம், என்று இனி எந்த படிப்பாக இருந்தாலும் சரி, கலைக் கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி சேருவதாக இருந்தாலும், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சோ்ந்தாலும், இந்த இட ஒதுக்கீட்டு முறையைத்தான் பின்பற்ற வேண்டும். இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கிறது.

இருந்தாலும், சில இடங்களில் நடைபெறுகின்ற தவறுகளை எல்லாம் நிவா்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான், உயா் கல்வித்துறை மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு: கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட உள்ள நிலையில் முழு பாடத்திட்டங்கள் நடத்தப்படும். கூடிய விரைவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com