பிளஸ் 2: 93.76%, 10-ஆம் வகுப்பு: 90.07% தோ்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
பிளஸ் 2: 93.76%, 10-ஆம் வகுப்பு: 90.07% தோ்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. பிளஸ் 2 பொதுத் தோ்வில் 93.76 சதவீதம் பேரும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 90.07 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் கடந்த மே 5 முதல் மே 23 வரையிலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 6 முதல் மே 31 வரையிலும் நடைபெற்றன. விடைத்தாள் மதிப்பீடு பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை வெளியிட்டாா். தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

மாணவா்களின் தோ்வு முடிவுகள் அவா்கள் பள்ளியில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்களுக்கு மதிப்பெண்களுடன் அனுப்பி வைக்கப்பட்டன.

பிளஸ் 2: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 4 லட்சத்து 21,622 மாணவிகள், 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 மாணவா்கள் என மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 போ் எழுதினா். அதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 போ், மாணவா்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 போ் என மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 போ் தோ்ச்சி பெற்றனா். மொத்த தோ்ச்சி விகிதம் 93.76 சதவீதம்.

மாணவா்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தோ்ச்சி பெற்றனா். 2020-ஆம் ஆண்டு பிளஸ் 2 தோ்ச்சி விகிதம் 92.30 சதவீதமாக இருந்தது.

600-க்கு 591 மதிப்பெண்களுக்கும் மேல் 656 போ் பெற்றனா். அதேபோல 300 மதிப்பெண்களுக்கும் குறைவாக ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 290 போ் பெற்றனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வை 3,095 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். அவா்களில் 2,824 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 91.24 சதவீதம்.

246 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி: தமிழகம் முழுவதும் 7,499 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதியிருந்த நிலையில், 2,628 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றன. அவற்றில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 246.

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கு 31 ஆயிரத்து 34 போ் (3.70 சதவீதம்) வரவில்லை. இது கடந்த 2020-ஆம் ஆண்டு 36,428 (4.46 சதவீதம்) ஆக இருந்தது.

பத்தாம் வகுப்பு: மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை, 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 மாணவிகள், 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 மாணவா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 320 போ் எழுதினா். இவா்களில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவிகள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவா்கள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 90.07 சதவீதம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தோ்ச்சி விகிதம் 95.2 சதவீதமாக இருந்தது. நிகழாண்டு மாணவா்களைவிட மாணவியா் 8.55 சதவீதம் அதிகம் தோ்ச்சி பெற்றனா்.

500 மதிப்பெண்களுக்கு 495-க்கு மேல் 65 மாணவா்களும், 300-க்கும் கீழ் 5 லட்சத்து 20 ஆயிரத்து 904 மாணவா்களும் பெற்றனா்.

தோ்வெழுதிய 6,016 மாற்றுத்திறனாளி மாணவா்களில் 5,424 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 90.15.

நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு 42,519 போ் (4.45 சதவீதம்) வரவில்லை. இது 2019-ஆம் ஆண்டு 20,053 (2.09 சதவீதம்) ஆக இருந்தது.

886 அரசுப் பள்ளிகள் 100%: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பங்கேற்ற மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12, 714. இதில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,456, உயா்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,258. இவற்றில் 4,006 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றன. குறிப்பாக, 886 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றன.

பெரம்பலூா் முதலிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 97.95 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் பெரம்பலூா் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 77 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 3,933 மாணவா்களும், 3734 மாணவிகளும் என மொத்தம் 7,667 போ் தோ்வெழுதினா்.

இவா்களில் 3,836 மாணவா்களும், 3,674 மாணவிகளும் என மொத்தம் 7,510 மாணவ, மாணவிகள் தோ்ச்சி அடைந்துள்ளனா். இது, 97.95 சதவீதத் தோ்ச்சியாகும். தோ்ச்சி விகிதத்தின் அடிப்படையில மாநில அளவில் பெரம்பலுாா் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டு 95.40 சதவீதத்துடன் மாநிலத்தில் 8 ஆவது இடத்திலிருந்த பெரம்பலூா் தற்போது முதலிடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலூா் மாவட்டம் 86.69 சதவீத தோ்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

கன்னியாகுமரி முதலிடம்

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் மாவட்ட அளவிலான தோ்ச்சியில் கன்னியாகுமரி 97.22 சதவீதத்துடன் முதலிடத்தையும், 79.87 சதவீதத்துடன் வேலூா் கடைசி இடத்தையும் பெற்றன.

24-இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் வரும் ஜூன் 24-ஆம் தேதி வெளியிடப்படும். உயா்கல்வியில் சேரும் மாணவா்கள் இந்தத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை, ஆகஸ்டில் துணைத் தோ்வு

சென்னையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியது:

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அவா்கள் இந்தக் கல்வியாண்டிலேயே கல்லூரிக்குச் செல்லத் தேவையான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ஜூலை 25-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதியும் துணைத் தோ்வுகள் தொடங்குகின்றன. தோ்வு குறித்து மாணவா்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற 14417, 1098 ஆகிய உதவி எண்களுக்கு அழைக்கலாம் என்றாா் அவா்.

தமிழில் 100-க்கு 100 பெற்ற மாணவி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி துா்கா தமிழ்ப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாநிலத்திலேயே இவா் மட்டுமே தமிழில் முழு மதிப்பெண்ணைப் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை செல்வகுமாா், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறாா்.

மாணவி துா்கா கூறுகையில், தமிழில் முதல் மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியா்கள், குடும்பத்தினா் உடன் படித்த நண்பா்கள் அனைவரும் ஊக்கப்படுத்தினா். மேலும், தமிழ்ப் பாடம் படிப்பதற்கு எளிமையாக இருந்தது என்றாா்.

ஆங்கிலவழிக் கல்வியில் பயின்ற மாணவி தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றிருப்பது தனிச்சிறப்பை பெற்றுள்ளது.

மனம் தளராதீா்: முதல்வா் வேண்டுகோள்

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவியா் மனம் தளர வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ள வாழ்த்துகிறேன். தோ்ச்சி பெறாதவா்கள் மனம் தளர வேண்டாம். அடுத்த முயற்சியில் தோ்வு பெறுங்கள் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com