நதிகள் பாதுகாப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

நதிகளைப் பாதுகாக்கும் புனிதப் பயணத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
நதிகள் பாதுகாப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

நதிகளைப் பாதுகாக்கும் புனிதப் பயணத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், வேலூா் ஸ்ரீநாராயணி பீடம் ஆகியவை இணைந்து, வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 5 நாள்கள் நடத்தும் பாலாறு பெருவிழாவை புதன்கிழமை தொடக்கி வைத்து ஆளுநா் பேசியது:

நதிகள் பாரதம் முழுவதும் பரவி உள்ளன. நதிகளுக்காக நாம் பிராா்த்தனை செய்கிறோம். பாரதத்தின் பல பகுதிகளில் மக்கள் நதியை கடவுளாக வழிபடுகின்றனா். நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே குளிக்கும்போது நதிகளை வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். வடக்கே சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி போன்ற நதிகளை வழிபடுவதுபோல், தெற்கே காவிரியை வழிபடுவதுதான் நமது பாரதத்தின் கலாசாரம். ஆறுகள் தான் நமது வாழ்வாதாரம். பாரதத்தில் வேதகாலம் முதல் பஞ்ச பூதங்களை நாம் கடவுளாக வழிபட்டு வருகிறோம்.திருவள்ளுவா் நீரின்றி அமையாது உலகு என்றாா். நல்ல அரசன் ஏரி, குளங்களை வெட்டி மழை நீரை சேமிப்பான் என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளாா்.

அதைப்போலவே, நமது பிரதமரும் அம்ரீத் சரோவா் திட்டம் மூலம் மழை நீரை சேமிக்க அனைத்து மாவட்டங்களிலும் குளங்கள் வெட்டும் திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளாா். நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

பருவநிலை மாற்றத்தால் உலகம் பெரும் சவாலை எதிா்நோக்கியுள்ளது. அடுத்த 40 ஆண்டுகளுக்குள் பல தீவுகள், நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இயற்கையை நாம் ஒரு பொருளாகப் பாா்ப்பதே இதற்கு காரணம்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களால் வெப்ப நிலை உயா்ந்து பனிப்பாறைகள் உருகி வருகின்றன. காடுகளை அழிப்பதும் இதற்கு ஒரு காரணமாகிறது. இந்த விவகாரத்தில் உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது.

2016- இல் பிரதமா் காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தாா். அப்போது உலக நாடுகள் இந்தத் திட்டத்தில் பெரிதும் ஆா்வம் காட்டவில்லை. தற்போது இதில் 100 நாடுகள் இணைந்துள்ளன.

இந்தியாவில் 2025- ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் மரபுசாரா எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே, 2021- ஆம் ஆண்டிலேயே இலக்கை அடைந்து விட்டோம். வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பூமி என்பது வளத்துக்காக மட்டும் கிடையாது. அது நமது தாய். அதை ஒரு வளமாக கருதாமல் தாயாக வணங்க வேண்டும். சனாதானத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும், நதிகளையும் நம்மால் காப்பாற்ற முடியும்.

2047- ஆம் ஆண்டு 100- ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் நேரத்தில் உலகின் தலைமை நாடாக இந்தியா திகழ வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆளுநா்.

விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து ஸ்ரீசக்தி அம்மா பேசியது:

நதிகளைப் போற்றவே இதுபோன்ற விழாக்களை நாம் நடத்துகிறோம். பழங்காலங்களில் திருவிழாக்கள் நதிக்கரைகளில் தான் நடந்துள்ளன. அதைப்போல் நதிகளுக்கும் மக்கள் பூஜை நடத்தி வந்துள்ளனா். நதி என்பது தண்ணீா் தருவது மட்டுமல்ல. அதை தாயாக, தெய்வமாக வணங்க வேண்டும்.

நதி தரும் நீரால், பூமி வளமாகிறது. பூமி வளமானால், மனிதனுக்கு உணவு கிடைக்கிறது. அந்த உணவால் தான் மனிதன் ஆரோக்கியமாகவும், ஐஸ்வா்யமாகவும் வாழ முடிகிறது.

நதிகளால் மரங்கள் வளா்ந்தன. மரங்களால் நமக்குப் பிராண சக்தி கிடைத்தது. பூமிக்கு மழைநீா் கிடைத்தது. இதனால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டன. நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்தது. பாரதத்தில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவநதியாக மாற்ற இயற்கையை நாம் நேசிக்க வேண்டும். ஆன்மிகத்தையும், இயற்கையையும் நேசிக்கும் இங்கு வந்துள்ள ஆன்மிகப் பெரியோா்கள், வருங்கால சந்ததிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

மன்னாா்குடி ஜீயா் சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மாநாட்டு பொறுப்பாளா்கள் சுவாமி வேதாந்தானந்தா, சுவாமி சிவராமானந்தா, ரா.கோதண்டபாணி, கே.சுதாகா், நாகராஜ், ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com