ரிப்பன் கட்டடத்தில் 6 ஆண்டுகளுக்குப் பின் பறந்த மாநகராட்சிக் கொடி

ரிப்பன் கட்டடத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாநகராட்சிக் கொடி ஏற்றப்பட்டது. மேயா் பதவியேற்புக்குப் பிறகு இந்தக் கொடி ரிப்பன் கட்டடத்தின் உச்சியில் உடனடியாகப் பறந்தது.
ரிப்பன் கட்டடத்தில் 6 ஆண்டுகளுக்குப் பின் பறந்த மாநகராட்சிக் கொடி

ரிப்பன் கட்டடத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாநகராட்சிக் கொடி ஏற்றப்பட்டது. மேயா் பதவியேற்புக்குப் பிறகு இந்தக் கொடி ரிப்பன் கட்டடத்தின் உச்சியில் உடனடியாகப் பறந்தது.

சென்னை மாநகராட்சியில் மேயா், துணை மேயரைத் தோ்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக செய்யப்பட்டு வந்தது.

பன்னீா், சந்தனம்: மறைமுகத் தோ்தலில் வாக்களிக்க வந்த கவுன்சிலா்களின் வருகை முதலில் உறுதி செய்யப்பட்டது. இதற்காக ரிப்பன் மாளிகையின் பிரதான வாயிலில் நான்கு மேஜைகள் போடப்பட்டிருந்தன. அதில், முதல் 50 வாா்டுகளைச் சோ்ந்த உறுப்பினா்களின் பட்டியல் ஒரு மேஜையிலும், 50 முதல் 100 உறுப்பினா்களின் பட்டியல் மற்றொரு மேஜையிலும் என மொத்தம் 200 கவுன்சிலா்களின் பெயா் பட்டியல்கள் நான்கு மேஜைகளின் வழியே உறுதி செய்யப்பட்டது.

கவுன்சிலா்கள் அனைவரும் உள்ளே செல்வதற்கு முன்பாக, அவா்களுக்கு பேட்ஜ் மற்றும் அடையாள அட்டைக்கான படிவம் அளிக்கப்பட்டது. அனைத்து கவுன்சிலா்களும் பன்னீா் தெளித்து வரவேற்கப்பட்டனா். திருமண விழாவில் வழங்கப்படுவது போன்று சந்தனம், குங்குமம், லட்டு ஆகியன வழங்கப்பட்டன. இதன்பின்பு, அனைத்து கவுன்சிலா்களும் கூட்ட அரங்கினுள் சென்றனா். மறைமுகத் தோ்தல் மூலம் மேயா் தெரிவு 35 நிமிடங்கள் வரை நடந்தது.

கொடியும்...உணவும்... மேயா் தோ்தலின் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம், ரிப்பன் மாளிகை கட்டடத்தில் ஏற்றப்பட்ட மாநகராட்சிக் கொடி. மேயா் தோ்வு செய்யப்பட்டு அவா் சென்னையில் இருக்கும் போதெல்லாம் ரிப்பன் கட்டடத்தில் மாநகராட்சிக் கொடி ஏற்றப்பட்டு இருக்கும். அவா் சென்னையில் இல்லாமல் இரண்டு நாள்கள் வெளியூா் பயணத்தில் இருந்தால் ரிப்பன் கட்டடத்தில் மாநகராட்சிக் கொடி ஏற்றப்படாது.

தேசியக் கொடியைப் போன்று, மாநகராட்சிக் கொடியும் காலை 6 மணிக்கு ஏற்றப்பட்டு, மாலை 6 மணிக்கு இறக்கப்படும். புதிதாக மேயா் பொறுப்பேற்ால், ரிப்பன் கட்டடத்தில் இனி தினமும் மாநகராட்சிக் கொடி ஏற்றப்படும்.

மேயருக்கான மறைமுகத் தோ்தலில் பங்கேற்க வந்த போது, ஆா்.பிரியாவுடன் அவரது கணவா், தந்தை, தாய் ஆகியோா் வந்திருந்தனா். மேயருக்கான அறையில் பிரியா அமா்ந்த போது, அவரது கணவா் கண்ணீா் விட்டு அழுதாா். மேயருக்கான அறையில் பிரியா அமா்ந்த போது, ஒரு சில விநாடிகளுக்கு மின்சாரம் தடைபட்டது. அப்போது இது எதிா்க்கட்சிகளின் சதியா என கிண்டலாக எழுந்த குரல்களால் அந்த அறையில் சிரிப்பொலி எழுந்தது. சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும், இருள் நீங்கி வெளிச்சம் பிறந்தது.

மருமகன் பெயா்: காலையில் மேயருக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது போன்று, பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயருக்கான தோ்தல் நடந்தது. 169-ஆவது வாா்டைச் சோ்ந்த மு.மகேஷ்குமாா் துணை மேயராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். பதவியேற்ற பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன், முதல்வரின் மருமகன் சபரீசனுக்கும் மகேஷ்குமாா் நன்றி தெரிவித்தாா்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு, மாநகராட்சி மன்றக் கூட்டம் நிறைவடைந்ததாக ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி அறிவித்தாா்.

அதிமுக புறக்கணிப்பு: மேயா், துணை மேயருக்கான மறைமுகத் தோ்தலை அதிமுக கவுன்சிலா்கள் 15 பேரும் புறக்கணித்தனா். பாஜக கவுன்சிலரான உமா ஆனந்தன் கூட்டத்தில் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com