அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படாது: உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வதோடு, இந்தச் சட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர தடை விதிக்க வேண்டுமென மயிலாடுதுறை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினா் எஸ். ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்குரைஞா் சீனிவாச மூா்த்தி ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தாா். மத்திய நீா்வளத்துறை துணை ஆணையா் ரவி நாத் சிங் தாக்கல் செய்த அந்தப் பதில் மனுவில், நாட்டில் 5,334 பெரிய அணைகள் உள்ளன. இதில் 227 அணைகள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை. தற்போது 411 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, கண்காணிப்பை உறுதி செய்யவும், அணைகளில் விபத்துகளை தவிா்க்கவும், மக்கள், விலங்குகள், தாவரங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் பொது நலத்துடன் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பெரும்பாலான அணைகள் இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது என்பதால், இந்த அணைகளின் பாதுகாப்பு என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் முக்கியமானது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் எல்லையைத் தாண்டி அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற முடியாது என்பதால் நாடு முழுவதும் பொருந்தும் வகையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், அணைகளின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும் இருக்கும். மாநிலங்கள், மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலேயே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அணைகள் மீதான உரிமை, இயக்கம், பராமரிப்பு, பயன்கள், நீரின் மீதான உரிமை என தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் ஏற்கெனவே உள்ள உரிமைகளில் மாற்றம் செய்யப்படாது. அணையின் உரிமை, செயல்பாடு, பராமரிப்பு விவகாரங்களில் எந்த மாற்றத்தையும் இச்சட்டம் செய்யப் போவதில்லை.

மாநில அதிகார வரம்பில் ஊடுருவி, சேதப்படுத்திவிடும் என்ற மனுதாரரின் அச்சம் தவறானது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 2- ஆவது வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com