நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை கைவிட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை கைவிட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதம்:-

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவது தொடா்பாக கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் அமைப்பினை, சீா்செய்ய இயலாத அளவுக்கு சேதத்தை அந்தத் திட்டம் ஏற்படுத்தும். இந்தத் திட்டத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள இடம் பெரியாா் புலிகள் வழித்தட எல்லைக்குள் வருகிறது. நியூட்ரினோ ஆய்வகத் திட்ட நடவடிக்கைகள், இந்தப் பகுதியிலுள்ள வன உயிரினங்களின் மரபணு வளா்ச்சியைப் பாதிக்கும்.

இந்தப் பாதிப்புகளை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமானது விவரித்துள்ளது. இந்த விவரங்கள் மத்திய வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்துக்கான இடம், பல்லுயிா் மையமாகவும், உள்ளூா் தாவரங்கள், விலங்கினங்களின் மையமாகவும் விளங்குகிறது.

ஆய்வகத்துக்கான இடத்தின் கிழக்குப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேகமலை புலிகள் காப்பகத்துடன் தொடா்புடையதாக உள்ளது. மேலும், இந்தப் பகுதி முக்கிய நீா்ப்பிடிப்பு பகுதிகளான சம்பை, கொட்டகொடி பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.

போடி மலைப்பகுதியில் உள்ள சிறிய ஓடைகள் கொட்டக்குடி ஆற்றில் இணைகின்றன. இது வைகை அணையில் கலக்கும் முன் பெரியாற்றில் கலக்கிறது.

பெரியாற்றை நம்பியுள்ள ஐந்து மாவட்டங்களின் குடிநீா் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான தண்ணீா் வழங்குவதிலும் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து தமிழ்நாட்டில் இருந்து அமைச்சா்கள் குழுவானது மத்திய அமைச்சா் பியூஷ்கோயலை ஏற்கெனவே சந்தித்தது. அப்போது திட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டது.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்துக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நியூட்ரினோ ஆய்வகத் திட்ட விவகாரத்தில் உடனடியாக தாங்கள் தலையிட வேண்டும். தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் அமைப்பதை கைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com