காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்; மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 17,901 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 
காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்; மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 17,901 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர், 

தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில் வழங்குவதற்காகவும், முக்கியத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் 19 அரசு மருத்துவமனைகளை புதிய  மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். 

உலகளாவிய நோய்த்தாக்க ஆய்வின்படி, மன அழுத்தம், பதற்றம், மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மனநல மருத்துவப் பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது. இத்தகைய உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை(IMH), தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 290 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனை தற்போது 500 படுக்கை வசதிகளுடன் 120 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை, 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும் தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு, தமது மருத்துவக் கல்வியைத் தொடர இயலாமல் தாயகம் திரும்பியுள்ள நமது மாணவ மாணவியர் அனைவரும் தமது மருத்துவக் கல்வியை தொடருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை வலியுறுத்தியுள்ளார். இந்த மாணவர்கள் நமது நாட்டிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக் கல்விக்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும்.

தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு 1,906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,547 கோடி ரூபாயும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17,901.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com