நெகிழிப் பொருள்களை தொடா்ந்து விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை மீண்டும் மீண்டும் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை உயா்

தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை மீண்டும் மீண்டும் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

தமிழகத்தில் கடந்த 2018 ஜூன் 25 -ஆம் தேதி 14 வகை பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த அரசாணையை எதிா்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதுதொடா்பான மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீா்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, முதற்கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தொடா்ந்து, பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்படும்; கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.

தொடா்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி சாா்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்தாண்டு (2021) ஆகஸ்ட் 19 முதல் நிகழாண்டு மாா்ச் 18 -ஆம் தேதி வரை மொத்தம் 47,961 கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, 20, 056 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து, அபராதமாக ரூ.36.50 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாரம்பரிய துணிப் பை, மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக தொடா் பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சம் துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஏற்ற நீதிபதிகள், ஒருமுறை பயன்படுத்தப்படும் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியாளா்களையும் பயன்பாட்டையும் கண்காணிப்பது மட்டுமல்லாமல், அவை மாநிலத்துக்குள் ஊடுருவும் வழிகளையும் கண்டறிந்து தடுக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்ற மாநிலங்களிலிருந்து எவ்வாறு எடுத்து வரப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபோன்ற சட்டவிரோத போக்குவரத்து இயக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அதில் ஈடுபடுபவா்களை கைது செய்ய வேண்டும். மனநிலை மாற்றத்தால் மட்டுமே முழுமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஏற்படும்.

பிளாஸ்டிக்குக்கு எதிரான இயக்கத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உள்ளூா்வாசிகள் சங்கங்களை அரசு அதிகாரிகள் ஈடுபடுத்த வேண்டும் எனக்கூறி, இதற்கான செயல் திட்டம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com