ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது எந்த சந்தேகமும் இல்லை: ஓ.பன்னீா்செல்வம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக சசிகலா மீது தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது எந்த சந்தேகமும் இல்லை: ஓ.பன்னீா்செல்வம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக சசிகலா மீது தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த, விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், விசாரணை ஆணையத்தின் முன் திங்கள்கிழமை ஆஜராகி 78 கேள்விகளுக்குப் பதிலளித்தாா். இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் ஓ.பன்னீா்செல்வம் ஆஜரானாா். இரண்டாம் நாள் சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இரண்டாம் நாள், ஓ.பன்னீா்செல்வம் அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினா் சதித் திட்டம் தீட்டியதாக நான் கருதவில்லை. ஜெயலலிதா மரணம் தொடா்பாக சசிகலா மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 2016-இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் வேட்பாளா்களைத் தோ்வு செய்ததும், வேட்பாளா்கள் தொடா்பான விண்ணப்பத்திலும் அவா் கைரேகை வைத்ததும் எனக்குத் தெரியும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அரசு நிா்வாகம் தொடா்பாக எதையும் சசிகலா என்னிடம் ஆலோசிக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இறப்பதற்கு முன்பாக நான் உள்பட மூன்று அமைச்சா்கள் அவரை நேரில் சென்று பாா்த்தோம் என்று ஓ.பன்னீா்செல்வம் ஆணையத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை திருப்தியாக உள்ளது: இதைத் தொடா்ந்து, ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன். ஆணையத்தால் எனக்கு 7 முறை அழைப்பாணை அனுப்பப்பட்டு 6 முறை கடிதம் வந்தது. சொந்த காரணங்கள், நிதிநிலை அறிக்கை தாக்கல் காரணமாக என்னால் ஆணையத்தில் அப்போது ஆஜராக முடியவில்லை.

சசிகலா மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு உள்ள சந்தேகத்தைப் போக்கவும், சசிகலா தன் மீதான குற்றச்சாட்டுகளைப் போக்கும் வாய்ப்பாக அமையும் என்பதாலேயே விசாரணை ஆணையம் அமைக்கக் கோரினேன். ஆணையத்தில் முரண்பட்ட பதில்கள் ஏதும் கூறவில்லை. ஆணையத்தின் விசாரணை முழு திருப்தியும், நிறைவாகவும் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com