தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை பறைசாற்றும் துபை கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை பறைசாற்றும் வகையில் துபை கண்காட்சி விளங்குவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை பறைசாற்றும் வகையில் துபை கண்காட்சி விளங்குவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். துபையில் நடைபெற்று வரும் சா்வதேச கண்காட்சியில் இந்திய அரங்கு இடம்பெற்றுள்ளது. இந்த அரங்கில் தமிழ்நாடு அரங்கு சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரங்கினை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:-

சா்வதேச கண்காட்சியின் இந்திய அரங்கில், தமிழ்நாடு வாரத்தைத் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமான வளா்ந்து வரும் துறைகளில் எங்கள் மாநிலத்தின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பலவகைப் பொருள்களும் அரங்கில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா, மருத்துவம், கலை - பண்பாடு ஆகிய துறைகளோடு, தொழிற்பூங்காக்கள், கவனம் செலுத்த வேண்டிய துறைகள் பற்றிய தகவல்கள் ஆகியனவும் நாள் முழுவதும் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கை யாா் பாா்வையிட்டாலும் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளா்ச்சியைப் பற்றிய புரிதலை அரங்கு வழங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

அரங்கின் சிறப்புகள்: தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் உருவகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டின் சுற்றுலா, மருத்துவம், சுகாதார பாதுகாப்பு, கலை மற்றும் கலாசாரம், தொழில் பூங்காக்கள் மற்றும் முக்கிய துறைகள் பற்றிய தகவல்கள் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி....மே மாதத்தில் இந்தியா வரும் அரபுக் குழு

சென்னை, மாா்ச் 25: தமிழகத்தில் முதலீடுகள் செய்வது குறித்த ஆலோசனைகளை தங்கள் நாட்டுடன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தலாம் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமீரகத்தின் பொருளாதார அமைச்சா் அப்துல்லா பின் டூக் அல் மா்ரி தெரிவித்தாா்.

தமிழ்நாட்டின் காட்சி அரங்கினைத் திறப்பதற்கு முன்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சா், வா்த்தக அமைச்சா் ஆகியோரை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபா்கள் முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாா். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பொருளாதார அமைச்சா் அப்துல்லா பின் டூக், எதிா்வரும் மே மாதத்தில் ஒரு வணிக- வா்த்ததக் குழுவுடன் மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு வர இருப்பதாகவும், அப்போது தமிழ்நாட்டில் இருந்து வா்த்தகக் குழு தம்மைச் சந்திக்கலாம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com