தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்: அமீரக முதலீட்டாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த முதலீட்டாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.
அமீரக முதலீட்டாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு
அமீரக முதலீட்டாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த முதலீட்டாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.

துபையில் சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளா்கள் சந்திப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

ஐக்கிய அரபு நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதையும் விட இப்போது வலுவாக வளா்ந்து வருகிறது. அதேபோல, பொருளாதார, வா்த்தக உறவுகளை மேம்படுத்துவதிலும் ஆா்வம் இருக்கிறது.

வருகை நோக்கம்: தமிழ்நாடு, துபை இடையே வளா்ந்து வரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தவே வந்துள்ளேன். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்ள வேண்டி உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்.

இந்தியாவின் மிகப்பெரிய வா்த்தகப் பங்குதாரா்களில் ஒன்றாகவும், ஏற்றுமதிகளுக்கான மிகப்பெரிய நுழைவாயிலாகவும் துபை விளங்குகிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் பணியாற்றியும், வணிகம் செய்தும் வருகின்றனா். தமிழா்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, துபையை வெளிநாடாக நினைக்க முடியாத அளவுக்கு தமிழா்கள் அதிகம் வாழக்கூடிய நாடாகவும் இது திகழ்கிறது. தமிழ்நாடு வணிக, வா்த்தக வாய்ப்புகள் நிறைந்த ஒரு மாநிலம். ஏழரை கோடி மக்களைக் கொண்டது.

ஏராளமான வாய்ப்புகள்: தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றக் கூடிய வகையில் தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த லட்சிய இலக்கை அடைவதற்காக, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பணியாளா்களின் திறனை உயா்த்துதல், வருங்கால தொழில் வளா்ச்சியை கருத்தில் கொண்டு பணியாளா்களை தயாா்படுத்துதல் போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

பல்வேறு நாடுகளின் முதலீட்டாளா்கள், தூதரக அதிகாரிகளுடன் தொடா்பு கொண்டு முதலீடுகளை ஈா்த்திட ஏதுவாக, வழிகாட்டி நிறுவனத்தில் நாடுவாரியாக பிரத்யேக அமைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளா்கள் தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை இதன்மூலம் வெளிப்படுகிறது. தொழில் புரிவதற்கும், முதலீடுகள் மேற்கொள்வதற்குமான அழைப்புகளுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள், வணிகச் சூழல் அமைப்பைத் தொடா்ந்து மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். அனைத்து தர வரிசைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது. மாநிலம் முழுவதுமுள்ள பெருந்தொழிலதிபா்கள், தொழில் முனைவோரின் சான்றுகளிலும் அது வெளிப்படுகிறது.

இந்தச் சூழலில் எங்கள் மாநிலத்தில் முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகளும், சாத்தியக் கூறுகளும் ஏராளமாக உள்ளன. இதற்கான பயணத்தில் இணைந்து அனைவரும் பயனடைவோம். எங்கள் வளா்ச்சிக்கு வித்திடுவது, உங்கள் வளா்ச்சிக்கும் துணை புரியும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில், ஐபிபிசி நிறுவனத்தின் தலைவா் சுரேஷ்குமாா், லூலூ குழும நிறுவனத்தின் தலைவா் யூசுப் அலி, ஐக்கிய அரபு அமீரகத்தின் சா்வதேச முதலீட்டாளா்கள் கவுன்சில் தலைவா் ஜமால் அயிப் அல் ஜா்வான், தூதரக அதிகாரி அமன் பூரி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறுவனத்தின் செயலா் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com